×

கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்களுக்கு தரமான உணவு, ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைப்பு: தமிழக அரசுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் பாராட்டு; திமுக அரசின் நடவடிக்கையால் பல கோடி ரூபாய் மிச்சம்; அதிமுக ஆட்சியின் முறைகேடு கண்டுபிடிப்பு

சென்னை: திமுக ஆட்சியில் கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்களுக்கு தரமான உணவு, அனைத்து வசதிகளும் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசின் நடவடிக்கையால் டாக்டர்கள், செவிலியர்களின் பாராட்டுக்கள் குவிகிறது. திமுக அரசின் நடவடிக்கையால் பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றது. சாதாரண நேரத்தில்தான் இதுபோன்று நடந்தது என்றால், கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் அரங்கேறியது.

கொரோனா காலத்தில் இஷ்டத்துக்கு பணத்தை அமைச்சர்கள் வாரி குவித்தனர். குறிப்பாக ஒவ்வொரு துறைக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வந்த நிதியில் இஷ்டம் போல் புகுந்து விளையாடினர். குறிப்பாக சென்னையில் கொரோனா அதிகரித்ததால் வெளிமாவட்டத்தில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ராயப்பேட்டை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனை, சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்கள் குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் பணி செய்வார்கள். அதன் பிறகு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

வீட்டிற்கு செல்லக்கூடாது. இதற்காக அவர்கள் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். 15 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்றால் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரச்னை என்றால் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நடைமுறை தான் இருந்து வந்தது. மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். இதற்காக பெரிய  அளவில் கமிஷன் வாங்கி கொண்டு ஓட்டலில் இருந்து உணவு சப்ளை வழங்க அனுமதி  வழங்கப்பட்டது. மக்களின் உயிரை காப்பாற்றிய  டாக்டர், நர்சுகள், மருத்துவ ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், சுகாதார மற்ற வகையிலும் இருந்தது. உணவு வழங்குவதில் கூட பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.  

இந்த மாதிரி புகார்கள் நிறைய வந்தது. திமுக ஆட்சி வந்ததும் இந்த புகார்கள் களைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தி தரமற்ற உணவு வழங்குதல், கமிஷன் வாங்கி கொண்டு ஓட்டல்களில் தங்க வைத்தல் போன்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் ஏற்கனவே, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சோமசுந்தரம் பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரை கடந்த மாதம் 21ம் தேதி சஸ்பெண்ட் செய்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்டை தொடர்ந்து திருவள்ளூவர் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரியாக இருந்த ஜெகதீஸ் சந்திரபோஸ் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஓட்டலில் கமிஷனை வாங்கி கொண்டு தங்க வைக்கப்பட்டது உடனடியாக நிறுத்தப்பட்டது. டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய சத்தான உணவு, தரமான உணவு வாங்குவது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில்குமார், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகிய 3  பேரும் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து  ஆணையர் செந்தில்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் மருத்துவ கல்லூரி டீனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

புகழ்பெற்ற ஓட்டல்  உரிமையாளர்களிடம் ஆணையர் செந்தில்குமார், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு  துறை அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.  தொடர்ந்து  ஓட்டல் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கமிஷன் கிடையாது.  எவ்வளவு குறைத்து கொடுக்க முடியும் என்று கேட்டனர். பேச்சு வார்த்தையில்  குறைந்த ரேட்டில் தங்க அனுமதிப்பதாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். அவர்களும்  ஒரே ரேட்டை முடிவை செய்து வழங்கினர். சென்னையின் அனைத்து பிரபல ஓட்டல்களும் கமிஷனே  வேண்டாம். முதல்வருடனான சேவையில் நாங்களும் பங்கேற்கிறோம் என்று கூறி குறைந்த விலைக்கு தரமான உணவு கொடுக்க ஒப்புக் கொண்டனர்.

அவர்களிடம் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் எந்த மாதிரியான உணவுகளை விரும்புகிறார்கள் என்று கேட்டனர். பின்னர் அவர்கள் விரும்பிய உணவே தரமாக வழங்கப்பட்டது. அதேபோல, எந்த மாதிரியான ஓட்டல்களில் தங்க நினைக்கிறார்கள் போன்ற விருப்பத்தை கேட்டனர். அவர்கள் குறிப்பிட்ட ஓட்டல்களிலேயே தங்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவனை டீனிடம், ஆணையர் செந்தில்குமார், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆலோசனை நடத்தினர். அப்போது தரமான உணவு கொடுக்கிறோம். நல்ல உணவு கொடுக்கிறோம். பாதுகாப்பான உணவு கொடுக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு கொடுக்கிறோம்.

இதற்கு எந்த வகையான ஓட்டல் வேணும்?. என்பதை முடிவு செய்தனர். மேலும் பதவிக்கு தக்க தங்கும் ஓட்டல்களும் முடிவு செய்யுங்கள் என்றும் டீனே முடிவு செய்யலாம் என்றும் அவர்கள் கூறினர். அந்த ஓட்டல்களில் டாக்டர்கள், நர்சுகள் மருத்துவ ஊழியர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக ஜெகதீஸ் சந்திர போஸை போடப்பட்டதற்கு அப்புறம் டாக்டர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும்20 ஓட்டல்களில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணியாற்றுபவர்களுக்கு ஒரு நேரத்திற்கு 2500 உணவு வீதம் 3 நேரத்திற்கு 7500 உணவு வழங்கப்படுகிறது. புரோட்டின் சக்தி அதிகம் உள்ள உணவு வழங்கப்படுகிறது. நோடல் ஆபிஷராக டீனை போட்டுள்ளனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தால் தான் பில் அதிமுக ஆட்சியில் செட்டில்  பண்ணப்பட்டது. இப்போது உணவு வழங்கும் ஓட்டல், தங்கும் ஓட்டல் பில்லை டீனிடம் வழங்க வேண்டும். டீனிடம் உணவு பாதுகாப்பு துறை பணம் கொடுத்து விடுவார்கள். இதனால், எங்கேயும் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லால் போனது. அது மட்டுமல்லாமல் உணவு முடிவை பண்ணுவது, ரேட் பிக்ஸ் பண்ணுவது, கண்காணிக்கிறது எல்லாமே உணவு பாதுகாப்புதுறை. பில் செட்டில் மட்டும் டீன். நேரத்திற்கு உணவு, தரமான உணவு, தரமான உணவில் சமைக்கப்படும் நேரம், அடுத்து சத்தான உணவு திமுக ஆட்சியில் கொடுக்கப்படுகிறது. இதனால் தங்கக்கூடிய டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் சந்தோஷமாக தங்குகின்றனர்.

திருப்பியாக சாப்பிடுகின்றனர். மனது திருப்தியுடன் திரும்பி போகின்றனர். இதனால், நிறைய டாக்டர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆணையர் செந்தில்குமார், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ் சந்திர போஸ்சுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். மாவட்டங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, செவிலியர்களுக்கு ரூ.375 செலவிலும், நோயாளிகளுக்கு ரூ.350 செலவிலும் தரமான வழங்கப்படுகிறது. இதனால்,  மாவட்டங்களிலும் திமுக அரசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் மாவங்களிலும் பல லட்சம் ரூபாய் மிச்சமாகி உள்ளது. தமிழக அரசின் இது போன்ற அதிரடி நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் மிச்சப்படுகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. எனவே, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுத்துள்ளது.

* கமிஷன் தரமாட்டோம், ‘டீலா.. நோ டீலா’
கொரோனா காலத்தில் ஓட்டல் எல்லாம் மூடப்பட்டிருந்தது. சாப்பாடும் கிடையாது. இதனால், வெளியூரில் வந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் தங்க முடியாத நிலையும், உணவு உள்ளிட்டவற்றில் பிரச்னை வந்தது. இதைத் தொடர்ந்து தங்க வைக்க கமிஷன் கொடுத்த ஓட்டல்களில் டாக்டர்கள், செவிலியர்களை கடந்த ஆட்சியாளர்கள் தங்கவைத்தனர். ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களுக்கு ஓட்டலிலேயே உணவு வழங்கப்பட்டது. அதிலும் கமிஷன் கொடுக்காத பல ஓட்டல்களில் தங்கியதற்காக பணம்  கொடுக்காமல் நிறுத்தப்பட்டிருந்தது. கமிஷன் தர சம்மாதிக்காத ஓட்டல்களில் ஊழியர்களை தங்க வைக்க அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. இதற்காக மருத்துவ ஊழியர்கள் சாதாரண ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்பார்ட்மென்ட், அரசு குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டது. கமிஷன் தந்த ஓட்டல்களில் மட்டுமே டாக்டர்கள், நர்சுகள் தங்க வைக்கப்பட்டனர்.

அதிமுக ஆட்சியில் உணவு ரூ.700; திமுக ஆட்சியில் ரூ.450
அந்த ஆலோசனையில் சரவண பவன், வசந்த பவன், அடையாறு ஆனந்தபவன் உள்ளிட்ட உயர்தர சைவ உணவு ஓட்டல் நிர்வாகத்தினர் மற்றும் தரமான அசைவ உணவு வழங்குபவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் ஒரு நேரத்திற்கு 2500 பேருக்கு உணவு வழங்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் உணவு தயாரிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் உணவை தயாரிக்க வேண்டும். எந்தவித கமிஷனும் கிடையாது என்றும் அதிகாரிகள் கோரினர். அதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் குறைந்த ரேட்டில் உணவு வழங்க ஒத்துக்கொண்டனர். ஒரு நாளைக்கு  ரூ.450 ரூபாய்க்கு உணவு வழங்க அவர்கள் ஒத்துக்கொண்டனர். அதிமுக ஆட்சியில் ஒரு நேரம் உணவுக்காக ரூ.700 செலவழிக்கப்பட்டது. கமிஷன் கட் செய்யப்பட்டதால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் வரை மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

மனதுக்கு ஓய்வளித்த ஸ்டார் ஓட்டல்கள்
மருத்துவர்கள், நர்சுகள் தங்கும் வைக்கும் ஓட்டல்கள் 5 ஸ்டார், 3 ஸ்டார், சாதாரண ஓட்டல் என்று 3 வகையாக பிரிக்கப்பட்டது. வரக்கூடிய டாக்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் அந்தந்த ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.5 ஸ்டார் ஓட்டலுக்கு தங்க ரூ.8000 என்பதை ரூ.2500, 3 ஸ்டார் ஓட்டலில் ரூ.2100, 3வது கேட்டகிரி ஓட்டல்கள் ரூ.1700 என்று, 4வது கேட்டரி ஓட்டலில் ரூ.1500 விதமாக பிரித்து வழங்க ஒத்துக்கொண்டனர். இங்கு தங்கியவர்கள் மன மகிழ்ச்சியுடனும், ஒன்றாக ஓய்வெடுத்தும் சந்தோஷப்பட்டனர்.

* முதல்வர் தந்த முழு சுதந்திரம்
தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிகாட்டுதலில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பணம் அதிக அளவில் மிச்சமாகியுள்ளது. தரத்தில் எந்த விதத்திலும் குறைவில்லாமல், விட்டு கொடுக்காமல் நேரில் பேசி லாபத்தில் ரேட்டை குறைத்து பணம் மிச்சம் படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக சென்று பேசியதால் நல்ல தரமான  உணவுகளை தருகின்றனர். தரமான உணவு, ஓட்டல்களில் தங்க வைக்க தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது உயிரை காப்பாற்றுபவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதை” என்றார்.

Tags : Corona Ward ,Tamil Nadu government ,DMK government ,AIADMK , Quality food for doctors working in Corona Ward, gold deposit in Star Hotels: Doctors and nurses praise Tamil Nadu government; DMK government saves crores of rupees; Discovery of AIADMK regime abuse
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...