×

அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது

சென்னை:  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலர் தற்போது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆம்பிசோம் லிபோசோமல், ஆம்போடெரிசின் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனையும் சிலர் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.  இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை சிலர் அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மேற்கண்ட பகுதியில் கண்காணித்தபோது,  4 பேர் கள்ளச்சந்தையில்  அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது, ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த உம்மு குல்சம் (26), கானத்தூரை சேர்ந்த பவுசானா (38), காட்டாங்கொளத்தூரை சேர்ந்த விவேக் (25), செஞ்சியை சேர்ந்த ராஜேஷ் (21) என்பதும், பெங்களூருவில் இருந்து ரூ.15 ஆயிரத்துக்கு மருந்தை வாங்கி, அதை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரத்துக்கு விற்றதும் தெரிந்தது.  இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 குப்பி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ன. இந்த மருந்துகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது, இவர்களின் பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளனர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Annasalai LIC , Four persons have been arrested for selling black fungus on the black market near the Annasalai LIC building
× RELATED அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே...