×

காமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

சென்னை: பெரியார், காமராஜர், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், ஊழியர்கள், துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தது.  கடந்த 2017ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 21 பேராசிரியர்கள் மற்றும் இணைப்பேராசிரியர்கள் நியமனம் குறித்த புகாரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த 69 பேர் பணி நியமன முறைகேடு குறித்து முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி உள்ளது.  

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள், பணியாளர் பணி நியமனம்,  கட்டமைப்பு பணிகள், கொள்முதலில் ஊழல் என 100 கோடிக்கும் அதிகமான  முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள்  தெரிவித்துள்ளனர். மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழக பேராசிரியர் பணிகளுக்கு  ₹50 கோடிக்கு மேல் கையூட்டு பெற்றுள்ளனர்.  இதுகுறித்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது.  இப்பபடி
இந்த 3 பல்கலைக்கழகங்களிலும் கடந்த 10 ஆண்டுகளாக  நியமன முறைகேடு, கட்டுமானம், விரிவாக்கம், புணரமைப்பு, பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகளில் சுமார் ₹500 கோடிக்கும் மேல் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

எனவே, இதை முறையாக விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில்,  பெரியார் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற நியமன முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு குழு உறுப்பினர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.



Tags : Kamaraj ,Periyar ,Annamalai ,IAS ,Minister ,Ponmudi Project , Appointment malpractice in 3 universities namely Kamaraj, Periyar and Annamalai: Inquiry committee headed by IAS officer: Minister Ponmudi Project
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...