திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு

புதுடெல்லி: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பணிந்து, கொரோனா சிகிச்சை கருவிகள், மருந்துகளுக்கான விலையை குறைக்கும் வகையில் அவற்றின் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா சிகிச்சைக்கான டோசிலிசுமாப் மருந்து, கருப்பு பூஞ்சை நோய்  சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி  வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் அதன் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகள், மருந்துகள் போன்வற்றின் விலையை குறைக்கும்படி, மத்திய அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதை ஏற்காமல் முதலில் மவுனம் சாதித்த மத்திய அரசு, எதிர்க்கட்சிகள், பாஜ அல்லாத பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்பால் பணிந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதமாக கூட்டப்படாமல் இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த 28ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பின் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘பேரிடர் காலத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்து ஆகியவற்றில் வரி விதித்துதான் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்றால் இது மனித தன்மை இல்லை. இதற்கு பூஜ்ய வரி விதித்தால் சில நூறு கோடி மட்டுமே ஒன்றிய அரசிற்கு இழப்பு ஏற்படும்.

இதை கூட பேரிடர் காலத்தில் மக்களுக்கு விட்டுக் கொடுக்க முடியவில்லை என்றால் அது திறமை இல்லாத அரசாக கருத முடியும்’  என்று சரமாரியாக விமர்சித்தார். இது, தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,  கொரோனா தடுப்பூசி, மருத்துகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி.யில்  இலிருந்து விலக்கு அளிப்பது, வரி குறைப்பது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது. இதில், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மேற்கண்ட குழு தனது அறிக்கையை கடந்த 7ம் தேதி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.

அதன்படி, நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில், மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: மாநில நிதி அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, கொரோனா சிகிச்சை கருவிகள், மருந்துகளுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் மருந்து, கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.

* மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்ஸ், சுவாச கருவிகள் ஆகியவற்றிக்கு விதிக்கப்பட்டு வந்த 12% வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 12% வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* கொரோனா பரிசோதனை கிட்களுக்கு 12 சதவீதமாக இருந்த வரி 5 சதவீதமாக்கப்படுகிறது.

* பல்ஸ் ஆக்சி மீட்டர்ஸ், சானிடைசர், உடல் வெப்பம் பரிசோதிக்கும் கருவி ஆகியவற்றிக்கு 5% ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* எரிவாயு, மின்சாரம் தகனத்திற்கான பிற உலைகளுக்கு 5 சதவீத வரியும், ஆம்புலன்சுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.

* கொரோனா தடுப்பூசிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 5% வரியில் எந்த மாற்றமும் இல்லை.

* மரபணு வரிசை முறை கருவிகளுக்கு 12% ஜிஎஸ்டி வரியே தொடரும்.

* டி-டைமர், இல் -6, பெரிடின் எல்டிஎச் போன்ற குறிப்பிட்ட அலர்ஜி நோயறிதல் கருவிகளுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

* இந்த வரி குறைப்பு மற்றும் மாற்றம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மாநிலங்கள் கருத்துக்கள் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கக் குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் காலக்கெடு நீட்டிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசிக்கான ஜிஎஸ்டி மத்திய அரசு செலுத்தும்

வரும் 21ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்ளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனால், தடுப்பூசி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மருந்துகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே வாங்கி, மாநிலங்களுக்கு வழங்க உள்ளது. இந்த 75% கொள்முதல் தடுப்பூசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசே செலுத்தும். அதே நேரம்,  இந்த ஜிஎஸ்டி.யில் இருந்து 70% வருமானம் மாநிலங்களுடன் பகிரப்படும்  என்று நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

Related Stories:

>