×

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கான நிவாரணம், கல்வி குறித்த திட்டங்களை செயல்படுத்துவது, நிதி ஒதுக்குவது குறித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலனை காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு, ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை  இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த  குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட,  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டத்தின் ஆலோசனையின்படி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தனி கணக்கு வைப்பது ஆகியவை குறித்தும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தையின் ெபயரில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கழகத்தில் வைப்பீடு செய்யப்படும். இந்த தொகை வட்டியுடன் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை  இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த  குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கழத்தில் வைப்பீடு  செய்யப்படும் அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது அந்த தொகை வழங்கப்படும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.   இக்குழந்தைகளுக்கு கல்விசெலவினங்களையும் அரசே ஏற்கும்.  தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும்  தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய்  வழங்கப்படும்.  அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல், உறவினர்  அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக,  மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அந்த குழந்தைகள் 18 வயது  நிறைவடையும் வரையில் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன்  அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும்  வழங்கப்படும்.

இந்த வழிகாட்டு நடைமுறைகளை சமூக பாதுகாப்பு ஆணையர் கடைபிடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். உறவினர்கள், காப்பாளர்கள், அல்லது குழந்தைகள் கவனிப்பை மையங்கள் அல்லது அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் இந்த குழந்தைகளுக்கான மாத தொகை ₹3 ஆயிரத்தை சம்மந்தப்பட்ட குழந்தைகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு கண்டறிய வேண்டும். சுகாதாரத்துறை, ஊடகங்கள் செய்திகள் ஆகியவற்றின் மூலம் புள்ளிவிபரங்களை சேகரிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். தாய், தந்தை இருவரையும் கொரோனாவில் இழந்த குழந்தைக்கு அவரின் பெற்றோரின் ஆண்டுவருமான வரம்பு எதுவும் இல்லை.

அரசு பணி, அரசு சார்ந்த பணி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய நபர்களின் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.  பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தால் அந்த பள்ளிகளில் தொடர்ந்து படிக்கலாம். பட்டப்படிப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம், படிப்பு கட்டணம், புத்தகம் மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு கண்காணிக்கும்.


Tags : Corona , Relief for orphaned children in Corona: No income limit: Government of Tamil Nadu Government Release
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...