×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் பார்போரா - அனஸ்டேசியா மோதல்: முதல் முறை சாம்பியனாக முனைப்பு

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் முறையாக சாம்பியனாகும் முனைப்புடன் பார்போரா கிரெஜ்சிகோவா - அனஸ்டேசியா பவுலியுசென்கோவா இன்று மோதுகின்றனர். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 128 வீராங்கனைகள் பங்கேற்றனர். நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா), நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் உள்பட முன்னணி வீராங்கனைகள் தோற்று வெளியேறிய நிலையில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா (25 வயது, 32வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா பவுலியுசென்கோவா (29 வயது, 31வது ரேங்க்) ஆகியோர் முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அதுமட்டுமல்ல கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறியதும், இவர்களுக்கு இதுவே முதல் முறையாகும்.

ஆனால்  ஜூனியர் அளவிலான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்  அனஸ்டேசியா 3 முறை பைனலுக்கு முன்னேறி ஆஸ்திரேலியா, யுஎஸ் ஓபன்களில் பட்டம் வென்றுள்ளர். பிரெஞ்ச் ஓபனில் மட்டும் தோற்றுள்ளார். சீனியர் அளவில் 2011 பிரெஞ்ச் ஓபனில் காலிறுதி வரை முன்னேறிய அனஸ்டேசியா இப்போது இறுதிப் போட்டியையும் எட்டிப் பிடித்துள்ளார். பார்போரா கிராண்ட் ஸ்லாம் தொடர்களின் ஜூனியர் இரட்டையர் பிரிவுகளில் 4 முறை பைனலுக்கு முன்னேறி, அதில்  பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன், விம்பிள்டன் ஓபனில் வெற்றி வாகை சூடியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் தோல்வியை சந்தித்தார். நடப்பு தொடரின் அரை இறுதியில் அனஸ்டேசியா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் தமரா ஸிடான்செக்கையும், பார்போரா 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் மரியா சக்கரியையும் வீழ்த்தினர். சக்கரிக்கு எதிரான போட்டியில் பார்போரா மேட்ச் பாயின்ட் நெருக்கடியில் இருந்து போராடி மீண்டு வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான அந்த போட்டி 3 மணி, 18 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.

* ராசியில் இது புதுசு!
பிரெஞ்ச் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய சாம்பியன்களே உருவாகி வருகின்றனர். நடப்பு சாம்பியன்கள் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த ஆண்டும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் சக்கரியிடம் கால் இறுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில், புதிய சாம்பியனாகி சாதனை படைக்க பார்போரா - அனஸ்டேசியா வரிந்துகட்டுகின்றனர். இவர்கள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30க்கு தொடங்குகிறது.


Tags : Barbora ,Anastasia ,French Open , Barbora - Anastasia clash in French Open tennis women's singles final: first-time champion
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் ரைபாகினா