மத்திய அமைச்சரவை மாற்றம் அமித்ஷா, நட்டாவுடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து அமித்ஷா, பாஜ தலைவர் நாட்டாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது, தடுப்பூசி போடுவதில் குளறுபடி உட்பட பல்வேறு செயல்பாடுகளால் மத்திய அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை சமாளிக்கவும், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வின் வெற்றியை உறுதிப்படுத்தவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக, மத்திய அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களை சேர்த்து பலமாக்க திட்டமிட்டு உள்ளார். தற்போது, மத்திய அமைச்சரவையில் 53 பேர் உள்ளனர்.

ஆனால், 79 பேரை அமைச்சர்களாக நியமிக்க அனுமதி உள்ளது. மத்திய அமைச்சரவையில் திறமையாக செயல்படாத பலரை மாற்றி விட்டு, அவர்களுக்கு பதிலாக, திறமையான புதிய முகங்களுக்கு, குறிப்பாக இளம் வயதினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தை அடுத்த மாதம் செய்வது பற்றியும், புதிய அமைச்சர்களை தேர்வு செய்வது பற்றியும் கட்சியின் தலைவர், மூத்த அமைச்சர்களுடன் மோடி நேற்று ஆலோசனை நடத்துவார் என்று தகவல் வெளியானது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜேபி.நட்டாவுடன் தனது இல்லத்தில் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: