2024 மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக 3வது அணி வருமா? சரத் பவார் - பிரஷாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சமீபத்தில், சிவசேனா தலைவரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிராவில் மீண்டும் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணியை அமைப்பது பற்றி இருவரும் பேசியிருக்கலாம் என்றும், இதனால் மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு கவிழும் அபாயம் இருப்பதாகவும் ஊகங்கள் வெளியாகின. அப்போது,‘கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் கூட்டணி தொடரும்,’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர், சரத் பவாரை மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2024 தேர்தலில் பவார் தலைமையில் பாஜ.வுக்கு எதிரான கூட்டணியை அமைக்க வியூகம் வகுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் உத்தி வகுப்பதில் இருந்து தான் விலகிக் கொள்ளதாக பிரஷாந்த் கிஷோர் அறிவித்ததை சுட்டிக்காட்டி, மேற்கண்ட ஊகங்களை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மறுத்துள்ளார்.

Related Stories: