ஐதராபாத் டு மும்பை 700 கி.மீ நடந்து சோனு சூட்டை சந்தித்த சிறுவன்

சென்னை: தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் வெங்கடேஷ். அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர தவணை செலுத்த முடியாததால், தனியார் நிதி நிறுவனம் ஆட்டோவை பறிமுதல் செய்தது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்த வெங்கடேஷ், நடிகர் சோனு சூட்டை நேரில் சந்தித்து உதவி கேட்க முடிவு செய்தார். அதன்படி தெலங்கானா மாநிலத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்ற வெங்கடேஷ், தன் பயணத்தை கடந்த 1ம் தேதி தொடங்கி இருக்கிறார். 8 நாட்களாக ரோடு வழியாக நடந்து சென்ற அவர், இரவு நேரத்தில் கோயிலில் தங்கி ஓய்வு எடுத்திருக்கிறார். பிறகு மும்பையில் சோனு சூட் வீட்டுக்கு சென்றார். தனது ரசிகர் ஒருவர் 700 கி.மீ தூரம் நடந்து வந்ததை அறிந்த சோனு சூட், அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள சோனு சூட், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறி, அவனது குடும்பத்துக்கு உதவுவதாக உறுதி கூறியுள்ளார்.

Related Stories:

More
>