ரூ.3 கோடி கடன் விவகாரம் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகர் விஷால் நேரில் ஆஜராக சம்மன்: கோடம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஆர்.பி.சவுத்ரி உள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், சினிமா பைனான்சியராகவும் உள்ளார். இவரிடம் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் ‘சக்ரா’திரைப்படத்திற்காக ஆர்.பி.சவுத்ரியிடம் ரூ.3 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக வட்டியுடன் முழு பணத்தை செலுத்தியும் கடன் பெற்ற போது கொடுத்த ஆவணங்களை ஆர்.பி.சவுத்ரி கொடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத்திடம் நடிகர் விஷால் சார்பில் மேலாளர் அரிகிருஷ்ணன் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின்படி விசாரணை நடத்த துணை கமிஷனர் கோடம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.3 கோடி கடனுக்கான பணத்தை திரும்ப கொடுத்தும் அதற்காக வழங்கப்பட்ட காசோலைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் வழங்கவில்லை என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் புகார் அளித்த நடிகர் விஷால் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: