×

தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் 4 இடங்களில் ரூ.426.19 கோடியில் 3,260 குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு

சென்னை: தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் மயிலாப்பூர் தொகுதியில் 4 இடங்களில் ரூ.426 கோடியில் 3,260 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பருவகால மாறுபாட்டினால் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து, அதே இடங்களில் மறுகட்டுமானம் செய்து, முன்னர் அந்த குடியிருப்பில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மறுகட்டுமானம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில், மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஏகாம்பரம்பிள்ளை மற்றும் முனுசாமிபிள்ளை பகுதியில் ரூ.31.26 கோடி மதிப்பீட்டில் 208 வீடுகள் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளை நேற்று ஆய்வு செய்த ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த பகுதியில் அருகாமையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு குடிசைகளையும் கணக்கெடுப்பு செய்து அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்புகள் கட்ட உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.152 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1188 குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார்.  கொரோனா பெரும்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமமான சூழ்நிலையிலும் கட்டுமான பணிகளை காலதாமதம் இல்லாமல், நிர்ணயித்த காலவரம்பிற்குள் பணிகளை முடித்து பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், இத்திட்டத்தில் சீனிவாசபுரம் பகுதி-1 திட்ட பகுதியில் ரூ.51.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 396 குடியிருப்புகளையும் ஆய்வு செய்தார். டொம்மிங்குப்பம் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தில் ரூ.191.45 கோடி மதிப்பீட்டில் 1472 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, டொம்மிங்குப்பம் பகுதியில் தற்போது சிதலமடைந்த குடியிருப்புகளை பார்வையிட்ட அமைச்சர், அந்த குடியிருப்புகளில் வசிக்கும் ஒதுக்கீடுதாரர்களுக்கு, புதிதாக கட்டப்பட்டு வரும் பட்டினப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான உரிய தீர்வை விரைவில் செய்து முடிக்க அறிவுறுத்தினார். சீனிவாசபுரம் பழைய குடியிருப்புகளை ஆய்வு செய்து, அதே இடங்களில் அமையவுள்ள புதிய குடியிருப்புகள் 5 மாடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு திட்டமிட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் ராம.சேதுபதி மற்றும் வாரிய பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Mylapore ,Tamil Nadu Cottage Area Replacement Board ,Minister Thamo Anparasan , 422.19 crore 3,260 flats in 4 places in Mylapore constituency on behalf of Tamil Nadu Cottage Area Replacement Board: Minister Thamo Anparasan interview
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...