×

கல்லணை புனரமைப்பு, தூர்வாரும் பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: கடைமடை வரை நீர் செல்வதை உறுதி செய்ய உத்தரவு; மேட்டூர் அணையை இன்று திறக்கிறார்

சென்னை: காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதியான இன்று திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் ரூ.65.10 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் 4,061 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் முன்பாக, டெல்டா மாவட்டத்தில் நடை பெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று காலை 9.30 மணிக்கு தனி விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவரை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, அமைச்சர் கே.என்.நேரு, மாநகர கமிஷனர் அருண் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக மேலகொண்டையம்பேட்டை, திருவளர்சோலை வழியாக கல்லணைக்கு வந்தார்.

பின்னர் கல்லணை பார்வையாளர் மாடத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் தலைப்பு பகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.122 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளதை ஆய்வு செய்தார். நீர்ப்பாசனத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் இதுவரை நடந்துள்ள பணிகள் பற்றி முதல்வரிடம் விரிவாக விளக்கினர். பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை செல்லும்போது, காவிரி ஆற்று நீர்வழி பாதைகள் அடங்கிய வரைபடத்தையும், அங்கு நீர்வளத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து ஆய்வு மாளிகை கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்பிக்கள் தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருச்சி சிவா, திருநாவுக்கரசர், நீர்ப்பாசனத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது,  கடைமடைவரை தடையின்றி தண்ணீர் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படாத வகையில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு செப்பனிடும் பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர் கல்லணை-கொள்ளிடம் (பழைய) பாலம் வழியாக தஞ்சை மாவட்டம் வல்லம் சென்றார்.அதை தொடர்ந்து வல்லம் அருகே முதலைமுத்து வடிகால் வாரியில் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அங்கிருந்து தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் ரூ.17லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதை முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், ஸ்ரீ ரங்கம் கொடியாலம் கிராமத்தில் ரூ.29.70லட்சம் மதிப்பில் புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வுகளை முடித்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மன்னார்புரம் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்குபின் மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து சேலத்திற்கு தனி விமானத்தில் சென்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு சென்றனர்.

மேட்டூர் அணை இன்று திறப்பு: தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் மற்றும் ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், 10.49 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று காலை 10 மணிக்கு மேட்டூருக்கு செல்லும் முதல்வர், மேட்டூர் அணையை ஆய்வு செய்கிறார். பின்னர், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கிறார்.

* 18வது முறையாக குறிப்பிட்ட நாளில் அணை திறப்பு
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்கான நீர், சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறந்து விடப்படுகிறது. குறுவை, தாளடி, சம்பா என்று 3 பருவங்களில் நடக்கும் சாகுபடிக்கு ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணை கட்டி முடிக்கப்பட்ட 86 ஆண்டுகளில் இதுவரை 17 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 18வது முறையாக குறிப்பிட்ட நாளில் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

* திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் காரை நிறுத்தி விசாரணை
முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்டம் வல்லம் செல்வதற்காக திருக்காட்டுப்பள்ளி வழியாக காரில் சென்றார். அப்போது திருக்காட்டுப்பள்ளியில் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனை முன் காரை நிறுத்திய முதல்வர், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தவழ்மதியிடம், கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறதா, தடுப்பூசி போடப்படுகிறதா, மக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது அவர், கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கூறினார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்த முதல்வர், கொரோனா தொற்று காலத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை கூறினார்.

* லாலு பிரசாத்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மதச்சார்பின்மை மற்றும் சமூக-பொருளாதார சமத்துவத்தை நிலைநிறுத்தவும் ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கவும் முன்னிற்கும் சமூகநீதி வாகையர், சகோதரர் லாலு பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Mettur Dam , Reconstruction of the fort, excavation work Chief Minister MK Stalin's inspection: order to ensure that the water goes to the store; Mettur Dam opens today
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...