×

தமிழகம் முழுவதும் விற்பனை நிலையங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சென்னை:  எரிபொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற கோரி நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு நேற்று முதல் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு  நேற்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு கூடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 143 இடங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை சங்கம் தியேட்டர் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, ராஜேஷ் எம்எல்ஏ, வக்கீல்கள் செல்வம், சுதா, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர். தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடையாறு டி.துரை ஏற்பாட்டில் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகில் எல்.பி. சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைவர் தங்கபாலு கண்டன உரையாற்றினார். இதில், மாநில துணை தலைவர் தாமோதரன், மயிலை தரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் ஏற்பாட்டில் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணாசாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, கண்டன உரையாற்றினார். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் முத்தழகன் ஏற்பாட்டில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோயம்பேடு பாரத் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தை மாநில துணை தலைவர் விஜயன் தொடங்கி வைத்தார். இதில் தலைமை நிலைய செயலாளர் திருவான்மியூர் மனோகரன், ஜோதி பொன்னம்பலம், ராஜபாண்டி, சிவகுமார், உமா அட்சயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் ஏற்பாட்டில் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராயபுரம் சிமென்ட் ரோடு பாரத் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உரயைாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் ஏற்பாட்டில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லி பாபு ஏற்பாட்டில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ரங்கபாஷ்யம் தலைமையில், அமைந்தகரை பச்சையப்பா கல்லூரி அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ரகுநாதன், பி.ஆர்.ராஜேந்திரன், எம்.ஆர்.ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளச்சேரி பஸ் நிலையம் அருகே பாரத் பெட்ரோலியம் விற்பனை நிலையம் முன்பு அசன் மவுலானா எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Tamil Nadu , Congressmen protest in front of outlets across Tamil Nadu condemning the increase in petrol and diesel prices
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...