×

அதிமுக சட்டப்பேரவை துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி வைத்திலிங்கமா, விஜயபாஸ்கரா? எடப்பாடி, ஓபிஎஸ் மீண்டும் மோதலால் புதிய பரபரப்பு; நாளைக்குள் சமரசம் செய்ய தலைவர்கள் தீவிர முயற்சி

சென்னை: அதிமுக சட்டப்பேரவை துணை தலைவர் பதவியை பிடிக்க எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைக்குள் சமரசம் செய்ய தலைவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால் கட்சிக்குள் கடும் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தான் எப்போதும் 2வது கட்ட தலைவராகவே இருக்க முடியாது. நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அதனால் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இதற்கு அதிமுகவில் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.

ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால் அவரை 10 நாட்களுக்கும் மேலாக அவருடன் பேசிய மூத்த தலைவர்கள், இந்த ஒரு முறை விட்டுக் கொடுக்கும்படி சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அறிவிக்கப்பட்டவுடன், எடப்பாடி பழனிசாமிக்கு சால்வையோ, மலர் கொத்து கொடுத்தோ வாழ்த்தாமல், வேகமாக புறப்பட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். அதன்பின்னர் மாலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்று வாழ்த்து வாங்கினார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தனது தொகுதியிலேயே அதிக நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் முடங்கினார்.

பின்னர் சில நாட்கள் மட்டும் சில இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. 65 இடங்களையே பெற முடிந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் அந்தப் பதவியை கைப்பற்றத் துடித்தனர். ஆனால் முதல்வர் வேட்பாளருக்குத்தான் ஆதரவு கேட்டீர்கள் கொடுத்தோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்குத்தான் தரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இரு தலைவர்களும் கடுமையாக மோத ஆரம்பித்ததால், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி தலைவரை முடிவு செய்யலாம் என்று முடிவு எடுத்தபோதுதான் ஓ.பன்னீர்செல்வம் பணிந்தார்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று எடப்பாடி விரும்பினார். ஆனால் 2வது தலைவர் பதவியை கொடுத்து தன்னை எப்போதும் 2வது தலைவர்தான் என்று முத்திரை குத்த முயற்சி நடக்கிறது. பின்னர் கட்சியிலும் 2வது தலைவராக தன்னை மாற்றி விடுவார்கள் என்று பயந்த ஓ.பன்னீர்செல்வம் துணை தலைவர் பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவே தொடர விரும்புவதாக தெரிவித்து விட்டார்.
இதனால் எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை பிடிக்க 2ம் கட்ட தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

அதில் எடப்பாடி பழனிசாமி, மூத்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை முன்னிறுத்த முயன்றார். ஆனால் கவுண்டர் சமுதாயத் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால், துணை தலைவர் பதவியை முக்குலத்தோர் சமுதாய தலைவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார். இதனால் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளராக வைத்தலிங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றார். ஆனால், வைத்தியலிங்கம் மாவட்டச் செயலாளர், துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். எம்பி பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. அதை வீணடித்து விட்டு சட்டப்பேரவையில் நின்றார். தற்போது அந்த எம்பி பதவி திமுகவுக்கு கிடைக்க உள்ளது. இதனால் அவருக்கு வழங்கக் கூடாது என்று எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் மூத்த தலைவரான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் இருவருமே எடப்பாடிக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருப்பார்கள். மேலும் சட்டப்பேரவையில் இருவருக்கும் விவாதம் பண்ணத் தெரியாது என்று அனைத்து தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், இளைஞர் மற்றும் வேகமாகவும், புள்ளிவிவரங்களுடன் பேசும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை துணை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், விஜயபாஸ்கருக்கு கொடுத்தால் அவர் இரு தலைவர்களுக்கும் நடுநிலையாக இருப்பார். இதனால் அவருக்கு தன்னுடைய ஆதரவை வழங்கத் தயார் என்று எடப்பாடி கூறி வருகிறார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கத்தை வைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் கட்சிக்குள் முக்குலத்தோருக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்றால் வைத்திலிங்கம் அல்லது விஜயபாஸ்கருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளதால், இருவரில் ஒருவருக்கு துணை தலைவர் பதவி கிடைக்கும். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் கே.பி.முனுசாமிக்கோ அல்லது வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கோ கொறாடா பதவி கிடைக்கும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். வருகிற திங்கள்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைக்குள் அதாவது நாளைக்குள் துணை தலைவர் மற்றும் கொறாடா பதவிக்கு ஆட்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags : Vijayabaskara ,Edibati , Will the AIADMK face stiff competition for the post of Deputy Speaker, Vijayabaskar? Edappadi, the new sensation in the OPS back clash; Leaders make a serious effort to reconcile by tomorrow
× RELATED சம்பவம் நடந்த போது நீங்கள் தான்...