×

யூரோ கால்பந்து இன்று துவங்குகிறது: முதல் போட்டியில் இத்தாலி-துருக்கி மோதல்

ரோம்: 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து போட்டிகள் இன்று துவங்குகின்றன. இன்று ரோமில் நடைபெற உள்ள முதல் போட்டியில் இத்தாலி-துருக்கி அணிகள் மோதுகின்றன. ரோமில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிகோ மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 12.30 மணிக்கு இப்போட்டி துவங்குகிறது. இரு நாடுகளும் இதுவரை 11 முறை மோதியிருக்கின்றன. அவற்றில் 8 போட்டிகளில் இத்தாலி வென்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இத்தாலி அணியின் கேப்டன் ஜியார்ஜியோ சில்லினி, ஸ்டிரைக்கர் லொரென்சோ, மிட்ஃபீல்டர்கள் மான்சினி மற்றும் மார்கோ வெரட்டி என்ற இந்த 4 பேர் கூட்டணியே போதும் என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் மார்கோ வெரட்டி இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இந்த முதல் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம்தான். துருக்கி அணியின் கேப்டன் 35 வயதான புராக் இல்மாஸ், முன்கள வீரர்களில் உலகின் முன்னணி வீரர்களின் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார். வயதானாலும் மனிதர் மைதானத்தில் இறங்கி விட்டால் புயல்தான்.

இந்த யூரோ போட்டிகளுக்கு பின்னர் அவர் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே இத்தொடரில் அவர் முத்திரை பதிப்பார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர். கால்ஹனோக்லு அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். மிலான் கிளப்பில் ஆடிக்கொண்டிருக்கிறார். திறமையான வீரர் என்பதால் இவரை தூக்க ஆர்செனல் கிளப் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரையும் தவிர இளம் நட்சத்திரங்கள் யூசுப் யாசிசி (24) மற்றும் சென்கிஸ் (23) ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள். இருவருமே எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடிய மிட்ஃபீல்டர்கள். இத்தாலி வலிமையான அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துருக்கி அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. வெற்றியுடன் இத்தொடரை துவக்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளின் வீரர்களும் உள்ளதால், பரபரப்புக்கு குறைவிருக்காது.

Tags : Euro ,Ithali-Turkey , Euro football starts today: Italy-Turkey clash in the first match
× RELATED கொள்ளிடத்தில் வாகன தணிக்கையின் போது...