×

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு : சோதனைத் தரவுகள் போதாது என்று FDA அனுமதி மறுப்பு!!

வாஷிங்டன் : பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்க எப்டிஏ எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்திய அரசு அனுமதி அளித்துள்ள தடுப்பூசிகளில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைகள், முடிவுகள் வெளியாகும் முன்பே அவசரகால தேவைக்கு பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்து இருந்தது. ஒரு தடுப்பூசிக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் உலக சுகாதார அமைப்பு, எப்டிஏ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி வேண்டும்.

இந்த அமைப்புகளின் அங்கீகாரம் கிடைக்காததால் கோவாக்சின் 2 தவணை போட்டுக் கொண்டவர்களை பல்வேறு நாடுகள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருதுகின்றனர். இந்த நிலையில், கோவாக்சினை அமெரிக்காவில் விநியோகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஒகுஜன் என்ற நிறுவனம், தடுப்பூசிக்கு எப்டிஏ-வின் அனுமதி கோரி கடந்த மார்ச் மாதத்தில் தான் விண்ணப்பம் செய்து இருந்தது. ஒகுஜனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த எப்டிஏ அமைப்பு அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. கோவாக்சின் தடுப்பூசி சோதனையில் இருந்து ஒரு பகுதி தரவுகளை மட்டுமே இணைத்துள்ளதால் ஒகுஜனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட சோதனை முடிவுகளை இணைத்து மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்யுமாறு எப்டிஏ அறிவுறுத்தி உள்ளது. இதனால் கோவாக்சினுக்கு அனுமதி கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் மருந்தின் இறுதிக்கட்ட சோதனை விவரங்களை இதுவரை வெளியிடாமல் இருக்கும் பாரத் பயோடெக், வரும் ஜூலை மாதத்தில் எப்டிஏஅமைப்பிடம் தரவுகளை அளிப்பதாக அறிவித்து இருந்தது. 


Tags : United States ,FDA , கோவாக்சின்
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்