பூக்கள் விலை சரிவால் வாழ்வாதாரம் பாதிப்பு வங்கி கடன் தவணையை செலுத்த ஓராண்டு அவகாசம்-மலர் சாகுபடியாளர்கள் கோரிக்கை

ஓசூர் :  ஓசூர் பகுதியில் பூக்கள் விலை சரிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், எம்எல்ஏவுடன் ஆலோசனையில் நடத்தி மனு அளித்தனர். அதில், வங்கி கடன் தவணையை செலுத்த ஓராண்டு காலம் அவகாசம் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். ஓசூர் பகுதியில் பரவலாக மலர் செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பூக்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், பூக்கள் விலை சரிந்து, ஓசூர் பகுதியைச் சேர்ந்த மலர் சாகுபடியாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ரோஜா மலர்களை குப்பைகளில் கொட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பாதிப்பிலிருந்து இதுவரை மீளாத நிலையில், கொரோனா 2வது அலையால் அடி மேல் அடி விழுந்துள்ளது. இதுதொடர்பாக ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏவுடன் ஆலோசனை நடத்தி, அவரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

திருவிழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட வைபோக மேடை அலங்காரத்திற்காக பயன்படும் ரோஜா உள்ளிட்ட மலர்களின் தேவைகள் குறைந்து, விவசாய தோட்டங்களிலே தேங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தோட்டங்களில் பறிக்கப்பட்ட ரோஜா மலர்கள் 2 நாட்களுக்கு பின்னர், அழுகிய நிலையில் குப்பைகளில் வீசப்பட்டு வருகிறது. இதனால், ஓசூர் பகுதியில் ரோஜா உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் செலவு செய்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஓசூர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக சரியான பராமரிப்பின்றி, செடிகள் அழிந்து விட்டன. மீண்டும் செடிகளை வைக்க லோன் அல்லது மானியம் வழங்கப்பட வேண்டும். மின் கட்டணம் வசூலில் மென்மை போக்குடன் செயல்பட வேண்டும். வங்கி நிர்வாகங்கள் கடன் வசூலில் கெடுபிடி போக்கை கைவிட வேண்டும். மேலும், கடன் தவணையை செலுத்த ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும். ஓசூரில் உள்ள இன்டர்நேஷனல் பிளவர் மார்க்கெட்டினை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள், கோயில் விசேஷங்கள் ஆகியவைகளை தளர்வுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>