×

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க காலதாமதம்-உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

வேலூர், : வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்வதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வருகிறது. இறந்தவர்களின் சடலங்களை அரசு விதிமுறைகளின்படி உறவினர்களிடம் ஒப்படைத்து அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கொரோனா நோயாளி இறந்தால் அவரின் சடலம் பல மணி நேரம் காத்திருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அமரர் ஊர்தி இல்லாததால் ஆம்புலன்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி வரை  ெகாரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை எதிரே உள்ள மூஞ்சூர்பட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இறந்தவர்களின் உடல்களை மிகவும் காலதாமதமாக வழங்குவதாகவும், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் உடனடியாக வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து உடனடியாக சடலங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Vellore Government Medical College Hospital , Vellore: Delay in handing over corpses of corona victims at Vellore Government Medical College Hospital
× RELATED தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்