போடி அரசு பொறியியல் கல்லூரி பின்புறம் திறந்த வெளியில் குவிக்கப்படும் கொரோனா கழிவுகள்-முறையாக அப்புறப்படுத்த கோரிக்கை

போடி : போடி அரசு பொறியியல் கல்லூரி பின்புறம் குவிக்கப்படும் கொரோனா கழிவுகளை, முறையாக குழி தோண்டி புதைக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  போடியில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில் சொக்கநாதபுரம் பிரிவில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு தற்போது சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகள், முகக்கவசங்கள், மருத்துவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகள், ஊசி, மருந்து உள்ளிட்ட கழிவுகளை குழி தோண்டி புதைக்க வேண்டும்.

ஆனால், கடந்த சில வாரங்களாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள் ஆகியவற்றை, கல்லூரியின் பின்புறம் திறந்த வெளியில் குவித்து வருகின்றனர். இப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அவைகளை தின்னும் அபாயம் உள்ளது. மேலும், தற்போது வீசும் காற்றால் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் பறந்து அருகில் உள்ள தருமத்துப்பட்டி, மேலச்சொக்கநாதபுரம், ரெங்கநாதபும், கரட்டுப்பட்டி, வினோபாஜி காலனி ஆகிய கிராமங்களில் விழுந்து, பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, கொரோனா மருத்துவக் கழிவுகளை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>