×

கடல் சீற்றம் எதிரொலி!: பைபர் படகு மூழ்கியதால் 8 மணி நேரம் கடலில் தத்தளித்த காசிமேடு மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!!

சென்னை: சென்னை காசிமேட்டில் நேற்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் எதிர்பாராத விதமாக பைபர் படகு மூழ்கியதால் உயிருக்கு போராடிய மீனவர்கள் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த தேசம் என்பவரது பைபர் படகில் காசிமேட்டை சேர்ந்த சார்லஸ், காந்தி, வேலன் உள்ளிட்ட 4 பேரும் கோவளம் அருகே மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு கடல் சீற்றம் அதிகரித்து எதிர்பாராத விதமாக பைபர் படகு கடலில் மூழ்கியது. 


இதில் மீனவர்கள் 4 பேரும் கடலில் குதித்து டீசல் கேனை பிடித்து உயிருக்கு போராடினர். சுமார் 8 மணி நேரம் தத்தளித்த நிலையில் அதிகாலையில் கோவளத்தை சேர்ந்த மீனவர்கள், இவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் காசிமேடு மீனவர்களுக்கு வயர்லஸ் மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து மீனவர்கள் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசரிடம் முறையிட்டனர். உடனடியாக எம்.எல்.ஏ. எபினேசர், 4 விசை படகுகளை உணவுடன் துரிதமாக அனுப்பி வைத்ததோடு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தது. 


பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்த மீனவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே சுமார் 30 லட்சம் மதிப்புடைய பைபர் படகு மூழ்கிய போதும் உயிருடன் பத்திரமாக கரை சேர்ந்த மீனவர்களால் அவர்களது உறவினர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை கரை சேர்த்த சக மீனவர்கள் மற்றும் எம்.எல்.ஏ. எபினேசருக்கும் நன்றி தெரிவித்தனர். 



Tags : Kasimedu , Sea rage, piper boat, Kasimedu fishermen, rescue
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...