சாயல்குடி கடற்கரை பகுதியில் ஓயாத அலையால் வேரோடு சாயும் பனை மரங்கள்-தடுப்புச்சுவர் அமைக்க மீனவ மக்கள் கோரிக்கை

சாயல்குடி : சாயல்குடி கடற்கரை பகுதியில் கடல் அலையால்  பனைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் புதிய மரங்கள் நடவும், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மன்னார்வளைகுடா கடற்பகுதியான ரோச்மா நகர், நரிப்பையூர், முக்கையூர், கீழமுந்தல், மாரியூர், வாலிநோக்கம் வரையிலான 15க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிக ஆழமானது என்பதால், எந்நேரமும் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். கரையோரங்களில் மண் அரிமானத்தை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்கோளம்  பாதுகாப்பு மற்றும் வனத்துறை சார்பாக நடபட்ட பனைமரம், சவுக்கு மரங்கள் தொடர் வறட்சியால்  பட்டுபோய் நின்றது. அதிகாலை, இரவு நேரங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட பருவநிலை மாறும் காலங்கள், புயல், மலை, சூறைக்காற்று போன்ற இயற்கை சீற்றக் காலங்களில் கூடுதலாக அலை சீற்றம் இருக்கும்.

இதனால் பலத்த அலை வந்து கரையில் மோதி செல்வதால் பட்டுபோன மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது. கரை நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதால், கரை மட்டம் கிராமத்தின் நிலப்பரப்பிற்கு சமமான நிலைக்கு மாறி வருகிறது. இதுகுறித்து மீனவ மக்கள் கூறுகையில், ‘‘கடல் அலையால், கடற்கரை பகுதி முழுவதும் மண் அரிமானம் ஏற்பட்டு, மரங்கள் எல்லாம் சாய்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பேரிடர் காலத்தில் பேரலை, கடல் சீற்றம் ஏற்பட்டால் கடல் தண்ணீர், கடற்கரை அருகே உள்ள மீனவர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே அலையை தடுப்பதற்கு கரையோரங்களில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும், புதிய பனைமரம், சவுக்கு போன்ற மரங்களை நட வேண்டும், என்றனர்.

Related Stories:

>