பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி: நடால் - ஜோகோவிச் இன்று மோதல்

பாரிஸ்:  பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவு அரையிறுதியில் இன்று நடப்பு  சாம்பியன் நடால், உலகின் நம்பர் ஒன்  வீரர் ஜோகோவிச் ஆகியோர் மோதுகின்றனர்.  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, இந்தப்போட்டியின்  ஆடவர்  ஒற்றையர்  பிரிவு அரையிறுதிப் போட்டிகள் இன்று நடக்கின்றன. முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியனும், 13 முறை சாம்பியன் பட்டம்  வென்றவருமான  உலகின் 3ம் நிலை வீரர் ரபேல் நடால்(ஸ்பெயின்) களம் காண உள்ளார். அவரை எதிர்த்து உலகின் முதல் நிலை வீரரும், ஒருமுறை பிரரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற  நவோக் ஜோகோவிச்(செர்பியா)  விளையாடுகிறார்.

அதனால் இந்த அரையிறுதி ஆட்டம், இறுதிப்போட்டியை போல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் பிரெஞ்ச் ஓபனில்  8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் 7-1 என்ற கணக்கில் நடால் முன்னிலை வகிக்கிறார்.  அதேபோல்  பிரெஞ்ச் ஓபன் போன்ற களிமண் தரையில் இருவரும்  மோதிய 26 ஆட்டங்களில்  நடால்தான்  19ஆட்டங்களில் வென்றுள்ளார். அதே நேரத்தில்  ஒட்டுமொத்தமாக இவர்கள் இருவரும் மோதிய 57 ஆட்டங்களில்  ஜோகோவிச் 29 ஆட்டங்களிலும், நடால் 28 ஆட்டங்களிலும் வென்றுள்ளனர். எப்படி பார்த்தாலும் நடப்பு சாம்பியனே மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  விளையாட்டில் எதுவும் நடக்கலாம். எது நடந்தாலும்,  இந்தப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

இன்னொரு மோதல்

இன்று நடைபெறும்  2வது அரையிறுதியில்  ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர்  ஸ்வெரவ்(6வது ரேங்க்),   கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(5வது ரேங்க்) ஆகியோர் மோதுகின்றனர். ஸ்வெரவ் முதல்முறையாகவும்,  சிட்சிபாஸ் தொடர்ந்து 2வது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  இவர்கள் ஏற்கனேவே மோதிய 7 ஆட்டங்களில்,   5-2 என்ற கணக்கில் சிட்சிபாஸ் முன்னிலையில் உள்ளார்.

Related Stories:

More