×

ஐஎஸ்டி அழைப்பை உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடி: பாக். உளவுத்துறைக்கு உதவிய பெங்களூரூ வாலிபர்கள் கைது: ராணுவு உளவுத்துறையால் அம்பலம்

பெங்களூரு : பெங்களூருவில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஐஎஸ்டி அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக மாற்றி உதவி செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள், அதன் தீவிரவாதிகளின் செல்போன் அழைப்புகளை இந்திய உளவுத்துறைகளும், ராணுவ உளவுத்துறையும் உளவு பார்க்கின்றன. அதேபோல், இந்தியாவிலும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களுக்கு வரும் அழைப்புகளும் கண்காணிக்கப்படுகின்றன. சமீபத்தில், தென் மாநிலத்தில் இயங்கி வரும் ராணுவ முக்கியத்துவம்  வாய்ந்த அலுவலகத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை ராணுவ உளவுத்துறை இடைமறித்து கேட்டது. அதில் பேசிய நபர், தான் ராணுவ உயர் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, ராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை கேட்டார். இந்த அழைப்பின் மீது சந்தேகம் அடைந்த ராணுவ உளவுத்துறை, அந்த அழைப்பு எங்கிருந்தது வந்தது என்பதை கண்டறிந்தது.

அது பற்றி ரகசியமாக நடத்திய விசாரணையில், பெங்களூருவில் சட்ட விரோதமாக சிலர் மின்னணு டிவைஸ் பாக்ஸ் என்ற சாதனத்தின் மூலம், வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வரும் அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், ராணுவ அலுவலகத்துக்கு வந்த அழைப்பு, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றிய மத்திய உளவுத்துறைக்கு அது தெரிவித்தது. உடனடியாக, அவர்கள் பெங்களூரு போலீசாரை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி வளைத்து 2 பேரை கைது செய்தனர். பெங்களூரு பி.டி.எம் லே  அவுட்டில் உள்ள 6 இடங்களில் எலக்ட்ரானிக் டிவைஸ் பாக்ஸ் மூலம் இவர்கள் மோசடியில்  ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பெங்களூரு பி.டி.எம் லே அவுட்டை  சேர்ந்த இப்ராஹிம் (36), கவுதம் (27) என்று தெரியவந்தது.

இவர்கள் 30  எலக்ட்ரானிக் டிவைஸ் பாக்சுகளை வைத்து, அவற்றில் 960 சிம் கார்டுகளை  பொருத்தி, வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளை போன்று  மாற்றி தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் உதவி செய்து வந்துள்ளனர். அவர்களிடம்  இருந்து 32 எலக்ட்ரானிக் டிவைஸ், 960 சிம்கார்டுகளை  போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதானவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்ற மாநிலங்களிலும் உள்ளதா?
பெங்்களூருவில் செயல்பட்ட டிவைஸ் பாக்ஸ் சதிச் செயல், நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடக்கக் கூடும் என்று உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை இந்த கும்பல் உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி கொடுப்பதால், ராணுவ அலுவலகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களுக்கு செல்லும்போது அதன் மீது அதிகாரிகள், ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்படாது என்பதால் இந்த சதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Bach ,Bangalore , Fraud by converting IST call to domestic call: Bach. Bangalore teenagers arrested for aiding intelligence services: Exposed by military intelligence
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை