×

வலைதளங்களில் வட்டமடிக்குது ஒரு வித்தியாச அழைப்பிதழ் மணமகன் சோசலிஷம்; மணமகள் மம்தாபானர்ஜி: நல்வரவை விரும்பும் கம்யூனிசம், லெனினிசம்

சேலம்: ‘பிரமாண்டங்கள் மட்டுமே கவனம் ஈர்க்குமா? சில நேரங்களில் இயல்பான சில நிகழ்வுகளும் மக்களின் மனதில் நுழைந்து கவனம் ஈர்த்து விடும். இதை மெய்ப்பிக்கும் வகையில் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி, தனது மகன் திருமணத்திற்காக அச்சடித்துள்ள அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக இருப்பவர் மோகன். இவரது மகன் சோசலிசம்(25). இவரது திருமணம் வரும் 13ம்தேதி, சேலத்தை அடுத்துள்ள காட்டூரில் நடக்கிறது. மணமகன் பெயர் சோசலிஷம் என்றால், மணமகள் பெயர் மம்தா பானர்ஜி. இவர்களின் திருமணத்திற்கு நல்வரவை விரும்புபவர்கள் கம்யூனிசம் பிஏ,பிஎல்., லெனினிசம் பிகாம் சி.ஏ., அதோடு பேரன் மார்க்சிசம் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.  கட்சியில் பற்றோடு இருப்பார்கள். ஆனால் கட்சியின் பெயரையே தங்கள் வாரிசுகளுக்கு பெயராக வைத்து, திருமண அழைப்பாகவும் மோகன் வெளியிட்டுள்ளது கட்சியினர் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து மணமகனின் தந்தையும், சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான மோகன் கூறியதாவது: சிறுவயதில் இருந்தே பொதுவுடமை கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான். 1982ம் ஆண்டில் காட்டூர் இளைஞர் பெருமன்ற கிளை துணைச் செயலாளராக பொறுப்பு வகித்தேன். படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்து, கடந்த 2015ம் ஆண்டு முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறேன். கொள்கை மீது கொண்ட பற்றால், எனது முதல் மகனுக்கு கம்யூனிசம், 2வது மகனுக்கு லெனினிசம், 3வது மகனுக்கு சோசலிசம் என்று பெயர் சூட்டினேன். அவர்களின் பள்ளிச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும், இந்த பெயரே இடம் பெற்றுள்ளது. மூத்த மகனும் எனது வழியை பின்பற்றி அவனது ஆண்குழந்தைக்கு மார்க்சிசம் என்று பெயர் சூட்டியுள்ளார். தற்போது கடைசி மகன் சோசலித்திற்கு திருமணம் நடக்கிறது. எங்களது நெருங்கிய உறவினர் ஒருவர், கட்சியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவருக்கு பெண் குழந்தை பிறந்த நேரத்தில், இந்திய அரசியலில் தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த பெயரையே தனது மகளுக்கு சூட்டினார். தற்போது அந்த மம்தாபானர்ஜியை தான், எனது மகனுக்கு மணம் முடிக்க உள்ளோம். இவ்வாறு மோகன் கூறினார்.



Tags : Mamata Banerjee , Circulating Websites A Different Invitation Groom Socialism; Bride Mamta Banerjee: Welcome Communism, Leninism
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்