×

மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமனம்

சென்னை: தற்காப்பு பயிற்சியின் போது மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் கொடுத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீதான வழக்கை, சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். பத்மா ேசஷாத்திரி பள்ளி குழுமத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் பலர் தங்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக டூவிட்டரில் பதிவு செய்தனர். அதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளியின் கே.கே.நகர் கிளையில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது மாணவி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு அளித்தார்.

அதில், தன்னை பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் கலந்து கொள்ள காரில் அழைத்து சென்ற போது கராத்தே மாஸ்டர் கெபிராஜ் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த புகாரின்படி போலீசார் பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில், தற்காப்பு கலை பயிற்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதை உறுதி செய்யும் வகையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ்  நண்பர்கள் 3 பேர் போலீஸ் விசாரணையில் அனைத்து உண்மை என்றும், அதை நாங்கள் பல முறை நேரில் பார்த்ததாகவும் கூறி அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் கராட்தே மாஸ்டர் கெபிராஜ் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், அவர் மீது பாதிக்கப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் என 15க்கும் மேற்பட்டோர் காவல் துறை அறிவித்த புகார் எண்ணில் புகார் அளித்தனர். அதேநேரம் கெபிராஜிடம் நடத்திய விசாரணையில் அவரால் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பலர் கெபிராஜ் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளதும் அவரது நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி தெரியவந்தது. கராத்தே மாஸ்டர் பாலியல் வழக்கில் பத்மா சேஷாத்திரி பள்ளியின் நிர்வாகிகள் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதிக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை தொடர்ந்து கராத்தே மாஸ்டர் கெபிராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு டிஜிபி மாற்றி உத்தரவிட்டார்.இந்நிலையில் மாநகர காவல் துறையில் இருந்து மாற்றப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் வழக்கை சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் உத்தரவுப்படி விசாரணை தொடங்கி உள்ளது.

வழக்கின் முதற்கட்டமாக விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி இஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது விசாரணையை தொடங்கி உள்ளார். முதற்கட்டமான அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட போது கராத்தே மாஸ்டர் கெபிராஜ்  மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அளித்த வாக்குமூலம் அறிக்கையின் படி சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா விசாரணை தொடங்கி உள்ளார்.  பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவரை காவல் எடுத்து விசாரணை நடத்துவதற்கான பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது காவல் நிலையத்தில் நேரடியாகவும், காவல் துறை வாட்ஸ் அப் எண்ணியில் புகார் அளித்த தற்போதைய மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகளிடம் ரகசியமாக பாலியல் தொடர்பாக புகார் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளதால் பத்மா சேஷாத்திரி பள்ளி பாலியல் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : CBCID ,Padma Seshadri School ,Kibraj ,Inspector ,Latha , CBCID probe into Padma Seshadri School karate master Kibraj in case of intimidation and sexual harassment of students: Inspector Latha appointed as investigating officer
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...