வேலூர் அருகே ரெய்டுக்கு சென்றபோது சாராய வியாபாரிகள் வீட்டை உடைத்து 8.5 லட்சம், 15 பவுன் திருடிய எஸ்ஐ கைது: மேலும் 2 காவலர்களும் சிக்கினர்

வேலூர்: வேலூர் அருகே கள்ளச்சாராய ரெய்டுக்கு சென்றபோது, சாராய வியாபாரிகளின் வீட்டை உடைத்து 8.5 லட்சம், 15 சவரன் நகையை திருடியதாக எஸ்ஐ மற்றும் 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல் துறையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த குருமலை, நச்சுமேடு மலைகிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்றுமுன்தினம் அரியூர் போலீஸ் எஸ்ஐ அன்பழகன் தலைமையில் 4 காவலர்கள் நச்சுமேடு மலைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். சாராயம் காய்ச்சி விற்பதாக கூறப்படும் இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு போலீசார் சென்று பூட்டை உடைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது இருவர் வீட்டில் இருந்த 1000 லிட்டர் சாராய ஊறல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் கைப்பற்றி அழித்ததாக கூறப்படுகிறது.

 சாராய ரெய்டுக்கு வந்த எஸ்ஐ மற்றும் காவலர்கள் அந்த வீடுகளில் பீரோவை உடைத்து ₹8.5 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகைகளை திருடிச் செல்வதாக கூறி அப்பகுதியினர் வழிமறித்துள்ளனர். தகவலறிந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா, சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பணம் மற்றும் நகையை செல்வம் மற்றும் இளங்கோ குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் பணம் மற்றும் நகைகளை போலீசாரே திருடியதாக பொதுமக்கள் புகார் கூறியதால் வேலூர் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் விசாரணை மேற்கொண்டார். இதில் எஸ்ஐ மற்றும் காவலர்கள் பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அவரது உத்தரவின்படி, எஸ்ஐ அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகிய 3 பேர் மீதும் பகலில் வீட்டை உடைத்து திருடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அரியூர் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே எஸ்ஐ உட்பட 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>