×

நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவு தேர்வுக்கும் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் : பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

சென்னை: “நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவு தேர்வில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு துறையின் சார்பில் வெளியிடப்பட்ட 2019-20ம் ஆண்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயலாக்க வகைப்படுத்துதல் குறியீட்டிற்கு தங்களின் கனிவான கவனத்தினை ஈர்க்க விரும்புகிறேன்.  அந்த குறியீட்டில், தமிழ்நாடு 90 விழுக்காடு என்ற இலக்கினை கடந்து சாதனை படைத்துள்ளதோடு, நான்கு இதர மாநிலங்களுடன் சேர்ந்து முதல் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

70 காரணிகளை ஆராய்ந்து இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  பள்ளிக் கல்வியில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் கல்வியின் தரத்திற்கு இந்த திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.  மத்திய அரசினால் வெளியிடப்பட்ட குறியீட்டின்படி, தமிழ்நாட்டின் கல்வித் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது.  எனவே, மருத்துவப் படிப்புகள் உள்பட அனைத்து தொழில் படிப்பு மற்றும் இதர படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களின் திறமையை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து. எனவே, ‘நீட்’ தேர்வு உள்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, அனைத்து மேற்படிப்புகளுக்குமான சேர்க்கையை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டை பொறுத்தவரையில், கோவிட்-19 தொற்று காரணமாக மதிப்பெண் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குகிறதோ அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.


Tags : Tamil ,Nadu , Tamil Nadu should be exempted from all entrance exams including NEET exam: OPS letter to PM
× RELATED ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும்...