×

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 6,148 பேர் பலி: பீகார் அரசின் குளறுபடியால் 2 மடங்கு உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 6,148 பேர் பலியாகி உள்ளனர். பீகார் அரசின் குளறுபடியால் 2 மடங்கு பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா முதல் அலை தாக்கியது. அப்போது முதல் 2வது அலை தாக்கி வரும்  இப்போது வரையில், நாட்டில் தினசரி ஏற்படும் கொரோனா பாதிப்பு, பலி போன்ற விவரங்களை மத்திய அரசு தினமும் வெளியிட்டு வருகிறது. நாட்டில் இந்த 2வது அலை தீவிரமான நிலையில்தான் தினசரி பாதிப்பு எண்ணிக்கு 4 லட்சம் வரையிலும், பலி எண்ணிக்கை 4 ஆயிரம் வரையிலும் சென்றுள்ளது. ஆனால், தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் இந்த பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. தற்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு கீழும், பலி எண்ணிக்கை 2500க்கு கீழும் வந்துள்ளன. நேற்று முன்தினம் 92,569 பேர் பாதித்தனர்.

 2,219 பேர் பலியாகினர்.  இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் பலி எண்ணிக்கையில் நடந்த குளறுபடியே இந்த உச்சத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பலி பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரம் வருமாறு:

*  கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது.
* ஒரே நாளில் 6,148 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்துக்கு 59 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.
* நாடு முழுவதும் 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இதுவரை நாட்டில் உள்ள 24 கோடியே 27 லட்சத்து 26 ஆயிரத்து 693 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிக பலி ஏன்?
* பீகார் மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் பலி பற்றிய புள்ளி விவரங்கள் தவறாக பதிவிட்டதால், ஒரே நாளில் பலி எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.
* கடந்த புதன்கிழமை புள்ளி விவரங்களின்படி பீகார் மாநிலத்தில் 5,424 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருத்தம் செய்து வெளியிடப்பட்டு அறிக்கையில் 9,429 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4,005 பேர் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
* பீகார் மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 15 நாட்களாக இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யாததால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தவறு செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிதெரிவித்துள்ளார்.
* இந்தியாவில் கடந்த 5ம் தேதி ஒரு நாள் பலி எண்ணிக்கை 3,380 ஆக இருந்தது. 6ம் தேதி 2,677 ஆக சரிந்தது. இதுதான் 42 நாட்களுக்கு பிறகு பெரிய அளவில் சரிந்த பலி எண்ணிக்கை. 7ம் தேதி 2,427, 8ம் தேதி 2,123, 9ம் தேதி 2,219 என பலி எண்ணிக்கை பதிவானது. ஆனா்ல், பீகார் அரசு செய்த குளறுபடியால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

தடுப்பூசி வீணடிப்பு ஜார்க்கண்ட் முதலிடம்
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மே மாதத்தில் தடுப்பூசி வீணடித்ததில் ஜார்க்கண்ட் 33.95 சதவீத்துடன் முதலிடத்தில் உள்ளது. சட்டீஸ்கர் 15.79%, மத்திய பிரதேசம் 7.35% தடுப்பூசிகளை வீணடித்துள்ளது. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா முறையே 7.08%, 3.95%, 3.91%, 3.78%, 3.63%, 3.59% தடுப்பூசிகளை வீணாக்கி உள்ளது. கேரளா, மேற்கு வங்கத்தில் தடுப்பூசிகள் வீணாக்கவில்லை. அதே நேரத்தில் முறையே 1.10 லட்சம் மற்றும் 1.61 லட்சம் தடுப்பூசிகளை இரு மாநிலங்களும் மிச்சப்படுத்தி உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.


Tags : India , Corona kills 6,148 in one day in India: Bihar government doubles
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...