×

அன்பே மருந்து!

நன்றி குங்குமம் தோழி

புன்னகைத்தபடி வலம் வந்த அந்த இளவரசிகளை அத்தனை எளிதில்  மறந்துவிட முடியாது. சகோதரிகளான வானவன் மாதேவி, இயலிசை வல்லபி இருவரும் “மஸ்குலர் டிஸ்ட்ரோபி” எனும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலிகளில் வலம் வந்த போதிலும், அவர்களின் செயல்பாட்டால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தனர்.

அவர்களைப் பார்க்கும் அனைவரும் பிரமித்துத்தான் போனார்கள். தான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தங்களை குறுகிய காலத்திற்குள் புரிய வைத்து மீளாத்துயரில் ஆழ்த்தி விடைபெற்றார் வானவன்மாதேவி. கடந்த ஆண்டு அவரின் இறப்புச் செய்தி செவிகளுக்கு எட்டியபோது, அவருக்காக அழாத நெஞ்சங்கள் இல்லை. அக்காவின் பிரிவு தந்த அழுத்தத்தில் இருந்த தங்கை இயலிசை கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார்.

சகோதரிகள் இருவருமாக இணைந்து ஆரம்பித்த ஆதவ் அறக்கட்டளை மீண்டும் சேலத்தில் இயங்கும் என்ற நம்பிக்கையையும் நம்மிடத்தில் விதைத்திருக்கிறார், இயல் இசை.

இதோ அதன் நீட்சியாய் தசை சிதைவாளர்கள் சிலர் இணைந்து ஈரோட்டில் ஏற்றம் அறக்கட்டளை மூலமாக “வானவன் மாதேவி தசைசிதைவாளர் மருத்துவ மறுவாழ்வு திட்ட முகாம்” ஒன்றினை கடந்த வாரம் தொடங்கினர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயலிசை வல்லபியிடம் பேசியபோது…

“தசை சிதைவு நோயில் 48 வகை உள்ளது.  இது எதனால் வருகிறது என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை. மதம் கடந்து திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் பாதிப்பு உள்ளது. நோயின் தன்மையை உள்வாங்கினால் மட்டுமே மீள முடியும். அப்படி சிலர் மட்டுமே முயற்சி செய்து வெளிவருகிறார்கள்.

பெரும்பாலான தசைச் சிதைவாளர்களால் இது முடிவதில்லை. காரணம் பெற்றோர்கள். அவர்களது மனநிலை, குடும்ப சூழல் இப்படி பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குழந்தை மாற்றுத் திறனாளியாக இருந்துவிட்டால் அந்தக் குழந்தையை வெளியில் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை. பெரும்பாலும் அவர்கள் வீட்டிற்குள் முடக்கப்படுகிறார்கள்.

யாராவது அவர்களைத் தேடி வந்து பார்த்தால் மட்டுமே மனிதர்களின் தொடர்பு அவர்களுக்கு கிடைக்கிறது. அப்படி கிணற்றுத் தவளையாக முடங்கிவிடாமல் முயன்று வெளியே வந்தவர்கள்தான் நாங்கள். நம் வாழ்க்கையில் மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அது வீட்டுக்குள் இருந்தால் நடக்காது. முதலில் அடிப்படை மனநிலையில் மாற்றம் தேவை. மனநிலை நன்றாக இருந்தாலே உடல் நிலையும் தானாக சரியாகும்.

தங்களின் மற்ற குழந்தைகளை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வதுபோல் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளையும் பெற்றோர்கள் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் இந்தமாதிரியான மருத்துவ முகாம்களுக்காவது அழைத்து வரலாம். இங்கு வருபவர்கள் அவரவர் அனுபவத்தை பகிரும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அது அமையும். மருத்துவ ஆலோசனை முகாம்களில் யாரும் யாரையும் பார்த்து பரிதாபப்படப்போவதில்லை.

நான் கடந்த 20 வருடமாக ஹோமியோபதி மருந்து மட்டுமே எடுக்கிறேன். ஹோமியோபதி மருந்துகள் எந்தவித பக்கவிளைவுகளும் அற்றது. விலை மலிவானது,  இந்த நோய்க்கு மருந்தை விடாமல் எடுக்க வேண்டும். ஹோமியோபதி மருந்துடன், பிசியோ தெரபியும் இணையும்போது ஆயுட் காலத்தையும் நீட்டிக்க முடியும்.

இருக்கும் நிலையை அப்படியே தக்கவைத்துக்கொள்வது என்பதே தசை சிதைவாளர்களின் நிலை” என முடித்தார்,விழாவிற்கு தலைமையேற்று பேசிய டாக்டர் ஜீவானந்தம், “மருந்திலே சிறந்த மருந்து அன்புதான். அந்த அன்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுப்பார்கள். சமூகம் கொடுக்கிறதா என்பதே இங்கு கேள்வி? அப்படி கொடுக்கக்கூடிய சமூகத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்” என்றார்.

மேலும் ஹோமியோபதி மருத்துவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், பூனை கருப்பா சிவப்பா என்று பார்க்காமல், எலியைப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும். நீங்கள் எடுக்கும் மருந்து ஹோமியோ, சித்தா, யுனானி, அக்குபிரசர் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது உங்கள் நோயினை சரி செய்கிறதா எனப் பாருங்கள்.

தசைசிதைவாளர்களுக்கு என்று சில மருந்துகளை ஹோமியோபதியில் மருத்துவர்கள் வைத்துள்ளார்கள். கண்டிப்பாக இது பயன் தரும்” என முடித்தார். தொடர்ந்து ஈரோட்டைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஹோமியோபதி மருத்துவர்கள் குழு ‘வானவன்மாதேவி சிறப்பு மருத்துவ முகாமில்’ கலந்துகொண்ட தசை சிதைவாளர்களுக்கு (muscular dystrophy) ஆலோசனைகளை வழங்கினர்.

10 வயதிலேயே சகோதரிகள் வானவன் மாதேவியும், அவரைத் தொடர்ந்து அவரின் தங்கை இயலிசை வல்லபியும் தசைசிதைவு நோயால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் சத்துக்குறைவு என அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. “நான் நடக்கும்போதே கீழே விழுந்துவிடுவேன், உட்கார்ந்தால் என்னால் எழ முடியாது, மாடிப்படிகளில் ஒருபடி கூட என்னால் ஏற முடியாது. கைகளையும் தூக்க முடியாத நிலை. இந்த நோய்க்கு உலகத்தின் எந்த மூலையிலும் மருந்தில்லை, பிசியோதெரபி சிகிச்சை கொடுத்துப் பார்க்கலாம் என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். என் படிப்பும் தடைபட்டது.

நான் வீட்டிற்குள் முடங்கினேன்” என நேரலை ஒன்றில் பேசி இருக்கிறார் வானவன்மாதேவி. மேலும், நமது இயற்கையை நாம் சிதைத்துவிட்டோம், 18ம் நூற்றாண்டில்தான் நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். விளைவு சரியாக நாற்பது வருடம் கழித்து 1840ல் முதல் தசை சிதைவு பாதிப்பு நோயாளி ஒருவர் இருந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்குலர் டிஸ்ட்ரோபி (Muscular dystrophy)


மஸ்குலர் டிஸ்ட்ரோபி (muscular dystrophy) உலகை அச்சுறுத்தும் மரபியல் குறைபாட்டு நோய். தமிழில் இதை ‘தசைச்சிதைவு நோய்’ என்கிறார்கள். இது. உடலைப் படிப்படியாக உருக்கிவிடும். பொதுவாக மனித உடலில் ஒவ்வொரு முறையும் பல லட்சம் செல்கள் இறந்து, புது செல்கள் பிறக்கும். ஆனால் இந்த தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள். இவர்களின் உடலில் இறக்கும் செல்கள் மீண்டும் பிறக்காது. உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் முடமாகிப்போய், கை, கால்கள் செயலற்றுப் போகும்.

இந்நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் ஹோமியோபதி, பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் வலியினை குறைக்கலாம்.  இயந்திரங்களின் துணையோடு எழுந்து நிற்க முயலலாம். இக்குறைபாட்டை முற்றிலும் வென்று மீள்வதற்கு  இதுவரை எந்த வழியும் கண்டறியப் படவில்லை.

நோய்க்கான அறிகுறிகள்

*தசைகள் வலுவிழப்பு, விரைவில் சோர்வடைதல்.
*ஓடுதல், குதித்தல், படிகளில் ஏறுதலில் சிரமம்.
*உடலை சம நிலைப்படுத்தி நிற்கவோ நடக்கவோ இயலாமை.
*தசைகள் சிறுத்துப் போதல், பலமிழந்து போதல்.
*பலமிழப்பதால் இவர்கள் நடக்க இயலாமை, விரைவில் சக்கர நாற்காலிக்கு மாறுதல்.
*தொடர்ந்து இதயமும் நுரையீரலும் பாதிப்படைதல்.
*முதுகெலும்பு வளைந்து போதல்.
*மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டர் சுவாசக் கருவிகள் சிகிச்சைக்கு செல்ல நேருதல்.

- மகேஸ்வரி  நாகராஜன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!