×

குமரி அணைகளில் மறுகால் திறப்பு: திற்பரப்பில் ஒரு மாதமாக ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் மறுகால் திறக்கப்பட்டு உள்ளதால் திற்பரப்பு அருவியில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவி பகுதியில் இதமான சூழல் நிலவி வருகிறது.
கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. இதனால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. தற்போது கடந்த 2 மாதமாக கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் அணைகள் நிரம்பி மறுகால் திறக்கப்பட்டது. அதோடு கனமழையும் தொடர்ச்சியாக பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து பல நாட்களாக தொடர்ந்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கனமழை தணிந்து பருவமழை சீசன் தொடங்கி உள்ளது. குமரி அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்ட பின்னரும் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுவது நிற்கவில்லை. அதன்படி பயங்கர இரைச்சலுடன் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளமும் தண்ணீரால் மூழ்கி காணப்படுகிறது. தண்ணீர் அதிகமாக ஆர்பரித்து கொட்டுவதால் கல்மண்டபம் வழியாக பாய்ந்து செல்கிறது. கடந்த ஒரு மாத காலமாக திற்பரப்பு அருவி இவ்வாறு ஆர்பரித்து கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று மழை இல்லாமல் கடும் வெயில் அடித்தபோதிலும் திற்பரப்பு அருவி பகுதியில் இதமான சூழல் நிலவியது.

Tags : Kumari Dams , Re-opening of Kumari Dams: Water gushing for a month in the open
× RELATED மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை;...