×

விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் குமரியில் டெங்கு காய்ச்சல் அபாயம்: கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் டெங்கு காய்ச்சல் அபாயம் இருப்பதாக கொசுமருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.  குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தொடர்ந்து வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது. இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் புயல் மழைகளும், தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளது. இந்த மழை காரணமாக வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இவற்றில் கொசுக்கள் உற்பத்தி பெருகியுள்ளது. இரவு நேரங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது ஓட்டல்களில் உணவு பார்சலுக்கு கறி வகைகளை பார்சல் செய்ய பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்துகின்றவர்கள் அவற்றை ஆங்காங்கே சாலையோரங்களிலும், அலுவலக வளாகங்களிலும், வீடுகளின் சுற்றுப்புறங்களிலும் வீசி சென்றுவிடுகின்றனர். அவற்றில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு அரசு துறை அலுவலக வளாகங்களிலும், பள்ளி வளாகங்களிலும் சுகாதாரமற்ற நிலையில் மழைநீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பாக்கள் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.

இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தேவையற்ற பொருட்களை மழைநீர் தேங்கும் வகையில் வீடுகளை சுற்றிலும் வீசி எறிவதையும், கொட்டி வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஏடிஸ் கொசுக்கள் கருப்பு நிறத்தில், உடல் கால் பகுதிகளில் வெள்ளை நிற கோடுகளுடன் காணப்படும். இவை பகலில் மனிதர்களை கடிக்கும். அதிகாலை, மாலை வேளைகளில் அதிகம் மனிதர்களை கடிக்கும். பொதுவாக சுத்தமான தூய நீரில் இது முட்டையிடும். சிறிய அளவில் இருக்கின்ற தண்ணீரே இது முட்டையிட்டு பெருக போதுமானது.

வீடுகளை சுற்றி போடப்பட்டிருக்கும் தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள கழிவு பொருட்களான டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்கள், முட்டை தோடுகள் போன்றவை இதற்கு போதுமானது. இதன் ஆயுள் காலம் 30 நாட்கள். சில கொசுக்கள் 60 நாட்கள் வரை உயிர் வாழும். ஒரு ஏடிஸ் கொசு மூன்று நாட்களுக்கு ஒரு முறை 100 முட்டைகள் வரை இடும். கொசு முட்டைகள் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல மாதங்கள் வரை அழியாமல் இருந்து பின்னர் அது கொசுவாக மாறும். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Kumar , Risk of Dengue Fever in Kumari due to intermittent rains: Intensity of mosquito repellent work
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...