ஹைதராபாத்: மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இறுதியிலேயே நடைபெறும் என அதன் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் கூறியுள்ளார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கிய போதும் சுற்றுச்சுவரை தவிர வேறு எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை.
புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு பிரதமர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இம்மாத இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அந்த கூட்டத்தில் முதற்கட்டமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகள் தொடங்கப்படும் என ஹனுமந்த ராவ் குறிப்பிட்டார்.
இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் அதுவரை தற்காலிகமாக உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் ஆய்வகம் தொடங்கப்படும் என்று ஹனுமந்த ராவ் தெரிவித்தார்.