டெல்லி காவல் நிலையத்தில் போலீஸ் ‘ஏட்டம்மா’வுடன் ஆடல் பாடல்: கொரோனா விதியை மீறியதாக நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டுடன், சக காவலர் ஆடல் பாடல் வீடியோ எடுத்ததால், இருவருக்கும் விளக்கம் கேட்டு போலீஸ் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு சஷி மற்றும் கான்ஸ்டபிள் விவேக் மாத்தூர் ஆகியோரின் ஆடல் பாடல் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், போலீசார் இருவரும் காவல் நிலையத்திற்குள் சீருடை அணிந்த நிலையில், பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் டி.சி.பி உஷா ரங்கானி, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், ‘கொரோனா விதிமுறைகளின்படி இருவரும் முகக் கவசம் அணியவில்லை. கோவிட் விதிமுறைகளை மீறியுள்ளீர். காவல் நிலையில் இருவரும் சேர்ந்து செய்த செயல், உங்களது பணி சார்ந்த நடவடிக்கையில் ஒழுங்கீனமாக கருதப்படுகிறது. மேலும், உங்களது கடமைகளில் இருந்து அலட்சியம் செயல்பட்டுள்ளீர்கள். எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கான்ஸ்டபிள் விவேக், தனது பயன்பாட்டுக்காக சொந்தமாக புதியதாக யூடியூப் சேனலை உருவாக்கி, அவ்வப்போது வீடியோக்களை போட்டு வந்துள்ளார். தற்போது பெண் ஏட்டுடன் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரித்து போடுவதற்காக ஆடல் பாடல் வீடியோவை காவல் நிலையத்திலேயே தயார் செய்துள்ளார். இது, போலீசாரின் பணிவிதிகளை மீறிய செயல் என்பதால், இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>