வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் நகை, பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசார் கைது..!!

வேலூர்: வேலூர் அருகே மலை கிராமங்களில் சாராய வேட்டைக்கு சென்ற போது பூட்டிய வீடுகளில் இருந்து பணம், நகைகளை திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே குறுமலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக அரியூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 போலீசார் நச்சுமேடு கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

சாராயம் காய்ச்சுவதாக கூறப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற போலீசார், அங்கு அவர்கள் இல்லாததால் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 15 சவரன் நகைகளை திருடி சென்றனர். மலையை விட்டு கீழே இறங்கிய அவர்களை மலை கிராம மக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். 

இதில் கையும் களவுமாக சிக்கிய போலீசார், திருடிய பணம் மற்றும் நகைகளை தாங்களாகவே எடுத்து கொடுத்தனர். அப்போது கிராமமக்கள் எடுத்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மலைக்கிராம மக்கள் அனைவரும் காவல்துறையினருடன் அரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

வீடு புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். அதன் பேரில் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் மூன்று பேரையும் பணியிடைநீக்கம் செய்தனர். அதை தொடர்ந்து அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.  

Related Stories:

>