சாராயம் கிடைக்காத விரக்தி!: அரியலூரில் சானிடைசர் குடித்து ஒருவர் பலி...2 பேர் கவலைக்கிடம்..!!

அரியலூர்: அரியலூரில் சாராயம் கிடைக்காத விரக்தியில் சானிடைசர் குடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்கு அடிமையாக கிடக்கும் மதுபிரியர்கள், மது கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்து மரணிப்பது, வீட்டிலேயே கள்ள சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரியலூர் அருகே சானிடைசர் குடித்து ஒருவர் பலியாகியுள்ளார். 

அரியலூர் மேல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுனரே உயிரிழந்தவர் ஆவார். இளங்கோவன் தனது நண்பர்கள் மோகன் மற்றும் சரவணனுடன் சேர்ந்து கடந்த 7ம் தேதி போதைக்காக சானிடைசரை குடித்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளங்கோவன், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மோகன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சானிடைசர் குடித்து இளைஞர் இளங்கோவன் உயிரிழந்தது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories:

>