சசிகலா பற்றி பேசினால் தொலைத்துவிடுவோம் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு செல்போனில் கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

திண்டிவனம்: முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ரோசணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 7ம் தேதி அரசியல் ரீதியாக சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகம் வாயிலாக பேட்டி அளித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல் தன் அடியாட்களை வைத்து கைபேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக அசிங்கமாகவும், அநாகரிகமாகவும் பேசி பதிவு செய்து வருகிறார்கள். மேலும் கைபேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இன்றுவரை 500 பேருக்கு மேல் சமூக ஊடங்களில் என்னைப்பற்றி அநாகரிகமாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து என்னுடைய கைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். சசிகலாவை பற்றி பேசினால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்கள்.  இந்த கொலை மிரட்டல் மற்றும் அநாகரிக செயல்பாடுகளுக்கு சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம். எனவே கொலை மிரட்டல், ஆபாச பேச்சுக்களை பதிவு செய்ய காரணமான சசிகலா மற்றும் என்னுடைய கைபேசிக்கு போன் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் கடிதத்தை சி.வி.சண்முகம் ரோசணை காவல் நிலையத்துக்கு நேரில் சென்று இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் அளித்துள்ளார்.

Related Stories:

>