லடாக்கில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு: கீழ்நிலை பதவிகள் ஒதுக்கீடு

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் கீழ் நிலை அரசுப் பணிகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்காக ஒதுக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர்கள் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இந்த யூனியன் பிரதேசங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லடாக்கில் அரசு நிர்வாகத்தில் உள்ள கீழ் நிலை பணிகள் அனைத்திலும் உள்ளூர் மக்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லடாக் யூனியன் பிரதேசத்தின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘புதிய சட்டத்தின்படி அரசு பணிகளில் உதவியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட திறன் சார்ந்த பணிகளுக்கு ஊள்ளூர் மக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கு கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்டவராக அவர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். பணி நியமனம் நேரடியாக நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுவார்,’ என்று கூறப்பட்டுள்ளது. லடாக் ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசிதழில் அச்சாகும் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், சிபிஐ(எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ‘குறைபாடுகள் நிறைந்த சட்டம் இது. லடாக்கை சேர்ந்தவர் என்று ஒருவரை தீர்மானிப்பதற்கான எந்த வரையறையும் இல்லை,’ என்று கூறியுள்ளன.

Related Stories:

>