ரூ.3 கோடி கடன் செலுத்தியும் ஆவணங்களை கொடுக்க மறுக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் பரபரப்பு புகார்

சென்னை: திரைப்படத்திற்காக வாங்கிய ரூ.3 கோடி கடனை திரும்ப செலுத்தியும், கடன் கொடுக்கும் போது பெற்ற ஆவணங்களை தர மறுப்பதாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஆர்.பி.சவுத்ரி உள்ளார். இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.பி.சவுத்ரி திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், சினிமா பைனான்சியராகவும் உள்ளார். இவரிடம் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் ‘சக்ரா’ திரைப்படத்திற்காக ரூ.3 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக வட்டியுடன் முழு பணத்தை செலுத்தியும் கடன் பெற்ற போது கொடுத்த ஆவணங்களை ஆர்.பி.சவுத்ரி கொடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத்திடம் நடிகர் விஷால் சார்பில் மேலாளர் அரிகிருஷ்ணன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அதில், ‘சக்ரா’ திரைப்படம் தொடர்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் பிரவேட் லிமிடெட் மேலாண் இயக்குநர் ஆர்.பி.சவுத்ரியிடம் சில ஆவணங்களை கொடுத்து ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. கடன் பெற்ற பிறகு அந்த கடனை, கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி திரும்ப அளித்து விட்டோம். ஆனால் கடனுக்காக நாங்கள் கொடுத்த கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பேப்பர்களை ஆர்.பி.சவுத்ரி திரும்ப ஒப்படைக்க வில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டால், நீங்கள் கொடுத்த ஆவணங்கள் மற்றும் காசோலைகள் அனைத்தும் தொலைந்து விட்டது என்று கூறுகிறார். அதற்கு பதில் 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுக்கிறார். எனவே ரூ.3 கோடி கடனை திரும்ப  கொடுத்தும், நாங்கள் அதற்காக கொடுத்த ஆவணங்களை திருப்பி தர மறுக்கும் ஆர்.பி.சவுத்ரி மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஆவணங்களை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. புகாரின்படி விசாரணை நடத்த தி.நகர் துணை கமிஷனர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: