திருப்பத்தூர் அருகே சிறுமியை காதலிப்பதை தட்டிக்கேட்ட தேமுதிக மாவட்ட செயலரின் அண்ணன் அடித்துக்கொலை: 4 பேர் கைது; ஒருவருக்கு வலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை அருகே எர்ரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் தேமுதிக திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது அண்ணன் மாதேஸ்வரன்(48) ஸ்வீட் மாஸ்டர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரின் மகன் ஞானவேல்(24), 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்துள்ளனர். இதுகுறித்து ஹரிகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரும் மாதேஸ்வரனும் ஞானவேலை அழைத்து பேசினர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிகிருஷ்ணன் பைக்கில் எர்ரம்பட்டி கிராமம் அருகே சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த ஞானவேல், அவரிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டினாராம். இதுகுறித்து ஹரிகிருஷ்ணன், அவரது அண்ணன் மாதேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவர், அன்றிரவு ஞானவேலை தட்டி கேட்டார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர். அப்போது ஞானவேலின் கூட்டாளிகளான, அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன்கள் சந்தோஷ்(27), துளசி(30), பாலகிருஷ்ணன் மகன் கதிர்வேலு(25) மற்றும் ராஜாவின் மகன் பெருமாள்(25) ஆகியோர் ஹரிகிருஷ்ணன், மாதேஸ்வரனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் மாதேஸ்வரன் மயங்கி விழுந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிந்து ஞானவேல், சந்தோஷ், துளசி, பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கதிர்வேலுவை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>