பட்டாக் கத்தியுடன் நடுரோட்டில் ரகளை: ரவுடி கைது

பெரம்பூர்: மாதவரம் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி(26). இவர் வியாசர்பாடி பெரியார் நகர் ராஜாங்கம் தெருவில் உள்ள எஸ்.பி ஏஜென்சிஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கருப்பசாமி, நிறுவனத்தின் வெளியே சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் கருப்பசாமியின் முதுகில் வெட்டிவிட்டு சரக்கு வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த இறைச்சிக் கடைக்குள் நுழைந்த அந்த நபர் அங்குள்ள கண்ணாடிகளை பட்டாக் கத்தியால் குத்தி உடைத்ததோடு அங்கிருந்தவர்களையும் தெருவில் நடந்து சென்றவர்களையும் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டினார்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, செம்பியம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் பட்டாக் கத்தியுடன் மிரட்டி வந்த ரவுடி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் அவரை வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மகேஷ்(29), குடிபோதையில் பட்டாக் கத்தியுடன் மிரட்டி பொதுமக்களை காயப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மகேஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>