×

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளிக்க 10 நாள் அவகாசம்: விசாரணை குழுவுக்கு உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையை கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் 10 நாட்களில் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்தவர் சூரப்பா. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாக சூரப்பா மீது பல புகார்கள் கூறப்பட்டன. இதுபற்றி விசாரணை நடத்த தமிழக அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்  தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழு அமைக்கப்பட்டு விசாணை  நடந்தது. இந்த விசாரணையின் போது சூரப்பா மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது. விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, கடந்த ஏப்ரல் 11ம் தேதியுடன் சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால், அவர் கர்நாடகா செல்லாமல் சென்னையில்  தங்கியுள்ளார்.

மேலும், விசாரணைக்கு தேவையான விளக்கங்களைப் பெற சூரப்பாவுக்கு மே 3ம் தேதி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ‘‘உங்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை  எடுக்கக் கூடாது’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் தங்கள் சார்பிலான விளக்கத்தை விசாரணை ஆணையத்துக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்க  வேண்டும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையேற்று சூரப்பா தரப்பில் மே 11ம் தேதி விளக்கம் அளித்ததில், தனது மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும், முறைகேடு தொடர்பான புகார்களை தான் முற்றிலும் மறுப்பதாகவும், அதனால் தன்னை விசாரிக்க கூடாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும் சூரப்பா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு உள்ளதால் விசாரணை மீதான அறிக்கை தயாரிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியிருந்தார். அதன் பேரில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு 10 நாட்களில் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Anna University ,Commission of , 10 days to submit report on allegations against former Anna University vice chancellor: Order to the inquiry committee
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!