பிளஸ் 1 சேர்க்கைக்கு தேர்வு வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கையின் போது எந்த தேர்வும் வைக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில்  தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தார். அதில், பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் எந்த பாடப்பிரிவுக்கு அதிக அளவில் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒது க்கலாம். ஒரே பாடப் பிரிவுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் பத்தாம் வகுப்பு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்டு தேர்வு நடத்தி அதில் மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களை கொண்டு சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு நடத்த தேவையில்லை என்று பல தரப்பில்  இருந்தும் கருத்துகள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்ததால், அந்த தேர்வு  நடத்துவதை பள்ளிக் கல்வித்துறை ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்த கல்வி ஆண்டில் (2021-22) பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அந்த வழிகாட்டு நெறிமுறையில் அனைத்து அம்சங்களும் அப்படியே உள்ள நிலையில்,  4வது பத்தியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  பிளஸ் 1 சேர்க்கைக்கு மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுக்கு வரப் பெறுகிறதோ, அந்த சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். மேலும், 7ம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்கனவே  குறிப்பிட்டுள்ளவாறு 10ம்  வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்தத் தேவையில்லை.இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

Related Stories:

>