×

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆலோசனை

சென்னை: புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டப்பேரவை, கடந்த மே 7 அன்று பதவியேற்றது. அதையடுத்து, சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசிக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது ஆளுநர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் கேட்டறிந்தார்.இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜூன் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



Tags : T.N. Legislative Session ,Chief Minister ,Stalin ,Governor , tn assembly
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...