×

கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற தகவலுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை : எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!!

டெல்லி : கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற தகவலுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 60 -70% குழந்தைகளுக்கு ஏற்கனவே இணை நோய்கள் இருந்ததாக கூறி உள்ளார். அதே நேரம் வீடுகளில் சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு குறைந்த அளவிலான பாதிப்புகளே ஏற்பட்டதாகவும் அத்துடன் அவர்கள் விரைவாக குணம் அடைந்ததையும் எய்ம்ஸ் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 8 மாதங்களில் 3வது அலை ஏற்படும் என்றும் அது குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் வெளியாகும் தகவலை அவர் மறுத்துள்ளார்.இந்த தகவலுக்கு எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முதல் 2 அலைகளின் போது கிடைத்த தரவுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாகவும் இவற்றில் புதிய உருமாற்றங்களோ அல்லது குழந்தைகளுக்கு மோசமான பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் ரந்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். குழந்தைகளை 3வது அலை பாதிக்கும் என்பதற்கான தரவுகள் உலகளாவிய அளவிலும் அல்லது இந்திய அளவிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Tags : AIMS , கொரோனா
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி