சாயல்குடி பகுதியில் பனைமர மட்டை தொழில் படுஜோர்-தொழிலாளர்கள் மகிழ்ச்சி

சாயல்குடி : சாயல்குடி பகுதியில் பனைமர மட்டை தொழில் சூடு பிடித்துள்ளதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர், பொன்னகரம், உறைகிணறு, பனைமரத்துப்பட்டி, மூக்கையூர், பூப்பாண்டியபுரம், மேலக்கிடாரம், காவாகுளம், மேலச்செல்வனூர், சிக்கல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது அதிகமான பதனீர் உற்பத்திக்குரிய தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால், தொழிலாளர்கள் பனை மரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மரங்களில் உள்ள பனைமர மட்டையை வீடு கூரை வேய்தல், நார் பிரித்தெடுத்தல், மட்டை காம்பவுண்ட் தொழிலுக்காக தரம்பிரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து பனைமர தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பனைமர சீசன் என்பதால் கருப்பட்டி உற்பத்திக்கு பதனீர் இறக்குவதற்கு மரம் சீரமைக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற மட்டைகளை நீக்கும் பணி நடக்கிறது. கூரை வீடுகள் வேய்வதற்கும், நார் பிரித்தெடுத்தல், காம்பவுண்ட் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பனை மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தூரிகை ஒரு கட்டு தயார் செய்வதற்கு கூலியாக ரூ.40 வாங்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு 10 கட்டுகள் தயார் செய்ய முடியும்.

தூரிகை மற்றும் நார்கள் கயிறு, மெத்தை, காலடிகள் மற்றும் வீடு, அலுவலக அழகு சாதன பொருட்கள், பயன்பாடு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இக்கட்டுகளை வியாபாரிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். ராணுவ தளவாடங்களிலும் தூரிகை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நிய செலாவணி சந்தைக்கு பனை மரத்தொழில் உதவி புரிகிறது. கழிவு நார்கள் கரி மூட்டம் போடுவதற்கும், சினிமா செட்களில் தரையில் போடுவதற்கும் பயன்பட்டு வருகிறது. இதனால் பனைமர மட்டை மற்றும் தூரிகை, நார் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது,’’என்றனர்.

Related Stories:

>