ஏலகிரிமலையில் ஊரை விட்டு தள்ளிவைத்த விவகாரம் 4 குடும்பத்தினரிடம் வருவாய் அதிகாரி விசாரணை-தாசில்தாருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி

ஜோலார்பேட்டை : ஏலகிரிமலையில் ஊரைவிட்டு தள்ளிவைத்த விவகாரத்தில் 4 குடும்பத்தினரிடம் வருவாய் அதிகாரி விசாரணை நடத்தினார். பின்னர், தாசில்தாருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள முத்தானூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு, திருப்பதி, அண்ணாமலை, சுதாகர் குடும்பத்தினர். பழங்குடியினத்தை சேர்ந்த  இவர்கள் மூதாதையர் காலம் முதல் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

அங்குள்ள பகுதியில் இருக்கும் அனைவருக்கும் அரசு சார்ந்த எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும் செயல்பாடுகளுக்கு  இந்த 4 குடும்பத்தாரும் ஆதரவு தெரிவிக்கவில்லையாம். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இதனால் அந்த நபர், கடந்த 2 ஆண்டுகளாக 4 குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்து, பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்க விடாமலும், கோயிலில் நுழைய விடாமலும், கடையில் பொருட்கள் வாங்க விடாமலும் யாரிடமும் பேசவிடாமல் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏலகிரிமலை போலீசில் 4 குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில், மனோகரன், ரமேஷ், காளி, பிரபாகரன், ஆண்டி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்குள்ள விஏஓ மஸ்தானிடமும், 4 குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ஆர்ஐ அலுவலகத்தில், ஆர்ஐ சிலம்பரசன் விசாரணை நடத்தினார்.

அப்போது பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினரும் தாங்கள் பாதிக்கப்படும் விதம் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த 10 தினங்களாக குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அரை  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம். குளிப்பதற்கு கூட போதுமான தண்ணீர் கிடைக்காததால் காட்டுப் பகுதிக்கு சென்று பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் குளித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ஐ இதுகுறித்து தாசில்தாருக்கு  அனுப்பி, பின்னர் சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories:

More
>