×

நெல்லை - சங்கரன்கோவில் சாலையோரம் மூடைகளில் வீசப்பட்ட துணிகள் காற்றில் பறந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம்

நெல்லை : நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மூட்டை மூட்டையாக வீசப்பட்ட பழைய துணிகள்,  காற்றினில் பறந்து வாகன முன்பக்கத்தை மறித்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெல்லையில் இருந்து ராஜபாளையம் வரை உள்ள குறுகலான சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநில நெடுஞ்சாலைத்துறை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதையொட்டி சாலை விரிவாக்கத்தின்போது சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சாலை அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 4வழிச்சாலையின் இருபுறத்திலும் புளி, வாகை, வேம்பு, புங்கை என 500க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரித்து வளர்க்கப்படுகின்றன. இவை தற்போது 5 அடி உயரத்தில் வளர்ந்துள்ளன.

 நெல்லை முதல் சங்கரன்கோவில் வரை சாலையில் குறிப்பிட்ட இடைவெளிக்கிடையே பஸ்நிறுத்தங்களும், பயணிகள் அமர இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சுற்றுச்சூழ்நிலையை பாழ்படுத்தும் வகையில் நெல்லை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக கல்லூரியை தாண்டி நெல்லை - சங்கரன்கோவில் சாலையின் இருபுறத்திலும் பழைய துணிகள் மூட்டை, மூட்டையாக கட்டிக்கொண்டு போடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா 2வது அலை பரவல் காரணமாக அதிகமானவர்கள் பாதிக்கபட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்த கொரோனா தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திய உடைகளாக இருக்குமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

 எனவே, இவ்வாறு நெல்லை சங்கரன்கோவில் சாலையோரம் மூட்டைகளில் கட்டி வீசப்பட்டுள்ள பழைய துணிமணி மற்றும் ஆடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதனிடையே இந்த துணிகளில் ஒரு சில சிதறிக்கிடக்கின்றன. பலத்த காற்று வீசினால் துணிகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் வாகனங்களை இடைமறித்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட துறையினர்  தனிக்கவனம் செலுத்துவதோடு சங்கரன்கோவில் சாலையோரம் குவிந்து கிடக்கும் துணிகளை துரிதமாக அகற்றி அழிக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sangranko , Nellai: Old clothes thrown in bundles at various places on the road from Nellai to Sankarankoil, in the wind
× RELATED சங்கரன்கோவில் அருகே தடுப்பூசி...