×

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம் : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர்

புதுடெல்லி:  இந்திய தேர்தல் ஆணையத்தின் காலியாக இருந்த ஆணையர் பதவிக்கு உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா உள்ளார். 3 அதிகாரிகளை கொண்ட தேர்தல் ஆணையத்தின் மற்றொரு தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். ஒரு இடம் கடந்த ஏப்ரல் 12 முதல் காலியாக உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனுப் சந்திர பாண்டேயை நியமனம் செய்து ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். சட்ட அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் `1984ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த வர் பாண்டே. இவர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச ஆட்சி பணிகளில் அனுப் சந்திர பாண்டே 37 வருடங்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2019 உத்தரப் பிரதேசத்தின் தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அனுப் சந்திர பாண்டே, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியை பாஜக தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையில் கீழ் இயங்கிய அனுப் சந்திரா இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : UP ,Anoop Chandra Pandey ,India ,Chief Minister ,Yogi ,Adityanath , அனுப் சந்திர பாண்டே
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை