×

திரைப்பட இயக்குனர் சொர்ணம் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: திரைப்பட இயக்குனர் சொர்ணம் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.சொர்ணம் (வயது 88), சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை 8.35 மணியளவில் மாரடைப்பால் காலமானார். எம்.ஜி.ஆர் நடித்த 32 படங்கள் உள்பட 40 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள அவர், தமிழில் வெளியான தங்கத்திலே வைரம், சீர்வரிசை, நீ ஒரு மகாராணி, ஆசை மனைவி, மேளதாளங்கள், கங்கா யமுனா காவேரி, நான் ஒரு கை பார்க்கிறேன், ஒரே ரத்தம், டாக்டர் அம்மா உள்பட 14 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் ஒரே ரத்தம் என்ற படத்தில் மு.க.ஸ்டாலின் நடித்திருக்கிறார். கலைமாமணி உள்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள கே.சொர்ணம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த கே.சொர்ணத்துக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கே.சொர்ணத்துக்கு மனைவி அருள்மொழி, மகள்கள் முத்தரசி, கலையரசி உள்ளனர்.

அவரது உடலுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்களின் குடும்பத்தினருக்கும்  ஆறுதல் கூறினார். அப்போது துர்கா ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணத்தின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞரால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம்  கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது. எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராக திகழ்ந்த சொர்ணத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sornam ,MK Stalin , Film director Sornam's death: Tribute to MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...