மயிலாடுதுறை பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லைஉடற்கல்வி ஆசிரியர் கைது: மேலும் 2 மாணவிகள் புகார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலியல் விவகாரம் தொடர்பாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் 2 மாணவிகள்  புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள அரசு உதவிபெறும் டிபிடிஆர் தேசிய  மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் அண்ணாதுரை(50).  இந்த பள்ளியில் 2018ல் பள்ளி படிப்பை முடித்து தற்போது பட்டப்படிப்பு  படித்து வரும் 21வயது மாணவி, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  கடந்த 4ம் தேதி புகார் கொடுத்தார். அதில், 2010ல் இருந்து  2018 வரை இப்பள்ளியில் படித்து வந்தேன். விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் பள்ளி  உடற்கல்வி ஆசிரியர்  அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்றேன். பயிற்சி அளிக்கும்போது உடற்கல்வி  ஆசிரியர், பலமுறை இரட்டை அர்த்தத்தில் பேசினார். 2018ம் ஆண்டு கல்வி உதவித்தொகை  பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தனது வீட்டுக்கு அழைத்து  சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியரிடம்  விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மேலும் அதே பள்ளியில் 2010ம் ஆண்டு  முதல் 2018ம் ஆண்டு வரை படித்த ஒரு மாணவியும், 2008ம் ஆண்டு முதல் 2011ம்  ஆண்டு வரை படித்த மற்றொரு மாணவியும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அந்த  புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அண்ணாதுரை  கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். இதையடுத்து ஆசிரியர் அண்ணாதுரை மயிலாடுதுறை கோர்ட்டில்  நீதிபதி ரஷானா பர்தீன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் இரவு  ஆஜர்படுத்தப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளியில் இன்று விசாரணை

 நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறுகையில், பாலியல் புகாரில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணிபுரிந்த அரசு உதவிபெறும் டிபிடிஆர் தேசிய  மேல்நிலைப்பள்ளியில் இதுசம்பந்தமாக அறிக்கை பெற்று 2 தினங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் குமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று விசாரணை நடத்த உள்ளோம். முறையான அறிக்கை பெற்று முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். பாலியல் புகாரில் சிக்கி கைதான உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை மீது பள்ளி நிர்வாகமே நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Related Stories:

>